2014-10-23 15:52:02

திருத்தந்தையின் புதன் பொதுமறையுரை


அக்.22,2014. திருஅவையானது, ‘இயேசுவின் திரு உடல்’ என்ற புனித பவுலின் வார்த்தைகளை மையமாக வைத்து இப்புதன் மறையுரையை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருஅவை குறித்த நம் தொடர் மறைபோதகத்தில் இன்று, ‘கிறிஸ்துவின் திரு உடல் திருஅவை’ என்பதன் அர்த்தம் குறித்து நோக்குவோம். நம் உடல் ஒன்றேயாயினும், அது பல்வேறு கூறுகளால் ஒன்றாயுள்ளதுபோல், கிறிஸ்துவோடு திருஅவை உள்ளது. உலர்ந்த எலும்புகளுக்கு இறைவனின் ஆவி, வாழ்வையும் தசையையும் வழங்கும் இறைவாக்கினர் எசக்கியேலின் காட்சி, திருஅவை குறித்த முன்னோட்டமாக இருந்தது. திருஅவையும், புதுவாழ்வு எனும் இயேசுவின் கொடையால் நிரப்பப்பட்டு, அன்பிலும் தோழமையிலும் ஒன்றித்துள்ளது. திருமுழுக்கு வழியாக நாம் அனைவரும் கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்ப்பு என்னும் மறையுண்மையில் கிறிஸ்துவோடு ஒன்றிணைந்துள்ளோம். நாம் அனைவரும் தூய ஆவியில் பங்குதாரர்களாகவும் உயிர்த்த கிறிஸ்துவை தலையாகக் கொண்ட மறையுடலின் அங்கத்தினர்களாகவும் மாறுகின்றோம். இந்த மிகப்பெரும் மறையுண்மையை விவரிக்க திருமண அன்பெனும் உருவகத்தைப் பயன்படுத்துகிறார் புனித பவுல். கணவனும் மனைவியும் எவ்வாறு ஒரே உடலாக உள்ளார்களோ, அவ்வாறே கிறிஸ்துவும் திருஅவையும் ஒரே உடல். ஒரே உடலின் அங்கத்தினர்களாகிய நாம், முரண்பாடுகள் மற்றும் பிரிவினைகளுக்கான சோதனைகளை வெற்றிகண்டு ஒன்றிப்பில் வாழ அழைப்புப் பெற்றுள்ளோம். பிறரின் உதவித் தேவைப்படும் நம் சகோதர சகோதரிகளுக்கு தாராள மனதுடன் கூடிய அக்கறையை எப்போதும் வெளிப்படுத்துவதுடன், பிறரில் காணப்படும் கொடைகளை மதித்து, தூய ஆவி நமக்கு வழங்கியுள்ள பல கொடைகளுக்கு நன்றியுள்ளவர்களாக, தூய ஆவியால் தூண்டப்பட்டு, கிறிஸ்துவின் உடலை அன்பில் கட்டியெழுப்புவோமாக.
இவ்வாறு, தன் புதன் பொது மறையுரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.