2014-10-23 16:23:02

எபோலா நோயிலிருந்து காப்பாற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000த்தைத் தாண்டியுள்ளது - எல்லைகளற்ற மருத்துவர்கள் பணிக்குழு


அக்.23,2014. எல்லைகளற்ற மருத்துவர்கள் (Médecins Sans Frontières - MSF) என்ற பெயரில் Guinea, Sierra Leone, Liberia ஆகிய நாடுகளில் பணியாற்றிவரும் ஒரு பணிக்குழுவைச் சேர்ந்தவர்களின் அறிக்கையில், எபோலா நோயிலிருந்து காப்பாற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000த்தைத் தாண்டியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
எபோலா நோயினால் இறந்தோரின் எண்ணிக்கை மட்டுமே ஊடகங்களில் பேசப்பட்டு வரும் வேளையில், இந்நோயினால் பாதிக்கப்பட்ட 4,500 பேரைக் கண்காணித்துவரும் எல்லைகளற்ற மருத்துவர்கள் என்ற பணிக்குழுவின் முயற்சியால் 1000 பேருக்கு மேல் குணமாகியுள்ளனர் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
எல்லைகளற்ற மருத்துவர்கள் குழுவில் பணியாற்றிவரும் ஒருவர், தன் மனைவி, இரு மகள்கள் மற்றும் தன் சகோதரர் ஆகியோரை இந்த நோயில் இழந்ததாகவும், அவரது 18 வயது மகன் இந்நோயில் பாதிக்கப்பட்டாலும், தற்போது காப்பாற்றப்பட்டதாகவும் Fides செய்திக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
எல்லைகளற்ற மருத்துவர்கள் குழுவில் 3000த்திற்கும் அதிகமான பணியாளர்கள், எபோலா நோய் கண்டவர்களைக் கண்காணித்து வருகின்றனர்.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.