2014-10-22 15:52:26

முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் பெயரால் உர்பானியா பல்கலைக் கழகத்தின் ஓர் அரங்கம்


அக்.22,2014. உர்பானியா பல்கலைக் கழகம் எந்த ஒரு நாட்டுக்கும், கலாச்சாரத்திற்கும் சொந்தமானதல்ல, மாறாக, உலகெங்கிலுமிருந்து கிறிஸ்துவைப் பற்றி அறிய விழையும் அனைத்து மாணவருக்கும் சொந்தமான ஓர் கல்விக் கூடம் என்று முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் கூறினார்.
அக்டோபர் 21, இச்செவ்வாயன்று உர்பானியா பல்கலைக் கழகத்தின் ஓர் அரங்கம் முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் பெயருக்கு அர்ப்பணமாக்கப்பட்ட நிகழ்வுக்கு, முன்னாள் திருத்தந்தை அவர்கள் அனுப்பியிருந்த செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டார்.
பன்முகக் கலாச்சாரங்களிலிருந்து வந்து பயிலும் மாணவர்கள், உண்மையின் அடிப்படையில், அமைதியை வளர்க்கும் உரையாடலில் ஈடுபடவேண்டும் என்றும் முன்னாள் திருத்தந்தையின் செய்தி அமைந்திருந்தது.
இந்த அர்ப்பண விழாவில் கலந்து கொண்ட பேராயர் Georg Gänswein அவர்கள், திருத்தந்தை அனுப்பியிருந்த செய்தியை வாசித்தார்.
நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவரான கர்தினால் Fernando Filoni அவர்கள், இவ்விழாவில் தலைமை உரையாற்றியபோது, அறிவு சார்ந்த ஆன்மீகத்தின் தலைசிறந்த அறிஞராகத் திகழ்ந்த முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் திருஅவைக்கு ஆற்றியுள்ள பணிகளுக்கு நன்றி கூறும் வகையில் அமைந்துள்ள இந்த அரங்க அர்ப்பணம் தனக்கு மகிழ்வளிப்பதாக தெரிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.