2014-10-22 15:56:52

தன் வாழ்நாளில் குழந்தைத் தொழில் ஒழிப்பைக் காணும் வாய்ப்பு உள்ளது - அமைதிக்கான நொபெல் பரிசு பெற்றுள்ள சத்யார்த்தி


அக்.22,2014. தன் வாழ்நாளில் குழந்தைத் தொழில் ஒழிப்பைக் காணும் வாய்ப்பு உள்ளது என்று இவ்வாண்டு அமைதிக்கான நொபெல் பரிசு பெற்றுள்ள கைலாஷ் சத்யார்த்தி அவர்கள் கூறினார்.
மிக வறுமையில் வாடும் குடும்பங்களும், கல்வியின் முக்கியத்துவத்தை உணரும் நிலை வளர்ந்து வருவதால், தொழிலுக்கு அனுப்பப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்று IANS என்ற செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்றில் சத்யார்த்தி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
1990களில் 26 கோடி என்ற அளவில் இருந்த குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை, தற்போது 16 கோடியே, 80 இலட்சமாகக் குறைந்துள்ளது என்பதைச் சுட்டிக்காட்டிப் பேசிய சத்யார்த்தி அவர்கள், இது நம்பிக்கை தரும் போக்கு என்று கூறினார்.
தங்கள் குறைகளைக் கூறமுடியாமல் மெளனமாக வாழும் குழந்தைகளின் குரல்களை உலகெங்கும் எடுத்துச் செல்லும் தார்மீகப் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது, குறிப்பாக ஊடகங்களுக்கு உள்ளது என்று அமைதிக்கான நொபெல் பரிசு பெற்றுள்ள சத்யார்த்தி அவர்கள் தன் பேட்டியில் சுட்டிக்காட்டினார்.
Oslo நகரில் டிசம்பர் 10ம் தேதி, பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா யூசுப்சாய் அவர்களுக்கும், கைலாஷ் சத்யார்த்தி அவர்களுக்கும் அமைதிக்கான நொபெல் பரிசு வழங்கப்படும் விழாவிற்கு, இந்தியப் பிரதமரையும், பாகிஸ்தான் பிரதமரையும் மலாலா யூசுப்சாய் அவர்கள் அழைத்துள்ளார் என்று IANS செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆதாரம் : UCAN








All the contents on this site are copyrighted ©.