2014-10-22 15:30:11

அக்.23,2014. புனிதரும் மனிதரே : எளிமையே என் வாழ்வு என்றவர் (St John Gualbert)


இத்தாலியின் ஃபுளோரன்ஸ் நகரில் விஸ்தோமினி என்னும் பிரபுக் குடும்பத்தில் 985ம் ஆண்டு பிறந்தவர் புனித யோவான் குவால்பெர்ட். இளமையிலிருந்தே ஆன்மீக்க் காரியங்களில் அக்கறை காட்டி வளர்க்கப்பட்டார். இவரின் ஒரே சகோதரர் ஹூகோ ஒருநாள் கொலைச்செய்யப்பட்டார். பிரபுக் குடும்பத்தைச் சேர்ந்த யோவான், தன் வாளையும் எடுத்துக்கொண்டு எதிரியைக் காணச் சென்றார். ஒரு புனித வெள்ளியன்று, எங்கும் தப்பிச் செல்ல முடியாத சூழலில், தன் சகோதரனைக் கொன்றவனைச் சந்தித்தார் யோவான். வாளை உருவி அவரை வெட்டச் சென்றபோது, கொலைகாரரோ, யோவானின் காலில் விழுந்து, 'இயேசுவின் பாடுகளின் பெயரால் என்னை மன்னித்துவிடு’ என்று வேண்டினார். உடனே யோவான் மனம்மாறி, கொலைகாரரை மன்னித்து, பாவமன்னிப்பு பெறச்செய்து, தினமும் திருப்பலியில் பங்குபெறுமாறு மனமாற்றினார். தானும் அவரோடு கோவிலினுள் சென்று தன் பாவங்களுக்காகவும் அந்தக் கொலைகாரரின் பாவங்களுக்காகவும் இறவனிடம் மன்னிப்பை வேண்டினார். அதன்பிறகு, தான் துறவியாகும் முடிவை எடுத்து, புனித பெனடிக்ட் துறவு இல்லம் சென்று 1013ம் ஆண்டில் துறவியானார். இவர் தங்கியிருந்த பெனடிக்டன் துறவுசபை இல்ல அதிபர் இறந்தபோது, அனைவரும் சேர்ந்து இவரையே அதிபராக்க முயற்சித்ததால் அப்பதவியை ஏற்க விருப்பமில்லாமல் அங்கிருந்து தப்பிச் சென்றார். இன்னொரு துறவியுடன் அங்கிருந்து சென்று, கமல்தோலி என்ற துறவு இல்லத்தில் சிறிதுகாலம் தங்கியிருந்தபின், டஸ்கனி மாநிலத்தின் வால்லே ஒம்புரோசா எனுமிடத்தில் வாலொம்புரோசா எனும் துறவு சபையை அவ்விடத்தின் பெயராலேயே நிறுவினார். புனித பெனடிக்ட் துறவற சபை ஒழுங்குகளையே, புதிய சபையிலும் கடைப்பிடித்தார். பெனடிக்ட் துறவு சபையிலிருந்து பிரிந்தாலும் கூட, அந்தக் கடினமான வாழ்வை, தானும் வாழ்ந்து, தன் சபையில் இருந்தவர்களையும் வாழவைத்தார். துறவு இல்லத்தைவிட்டு யாரும் வெளியில் போகக்கூடாது என்ற சட்டத்தையும், இவ்வுலக வாழ்வை துறவு வாழ்வில் துறவிகள் ஒருபோதும் வாழக்கூடாது என்ற ஒழுங்கையும் கடினமாக கடைபிடிக்கக் கூறினார். பல துறவு இல்லங்களைத் தொடங்கிய யோவான், அவ்வப்போது இல்லங்களைத் தவறாமல் சந்தித்து, உற்சாகத்துடன் இறைவனின் பணியில் பங்குபெற துறவிகளை ஊக்கமூட்டினார். பிறரன்பு நடவடிக்கைகளுக்காக இவர் மிகவும் புகழ்பெற்றிருந்தார். தன் சபை இல்லத்திற்கு உதவி கேட்டு வரும் எவரும் வெறுங்கையராகச் செல்லக்கூடாது என்பதை ஒரு விதியாகவே வைத்திருந்தார். தான் வாழ்ந்த பகுதியில் திருஅவைப் பதவிகளைப் பணம்கொடுத்து வாங்கும் பழக்கம் இருந்ததை அடியோடு ஒழிக்க அயராது பாடுபட்டார் துறவி யோவான்.
இவரின் புதிய சபைக்கு திருத்தந்தையின் அங்கீகாரம் 1070ம் ஆண்டு வழங்கப்பட்டது. வருங்காலத்தை முன்னரே எடுத்துரைக்கும் வரம் இவருக்கு இருந்தது. தான் வாழ்ந்தகாலத்திலும், இறந்தபின்னரும் பல புதுமைகளை ஆற்றியுள்ளார் யோவான்.
1073ம் ஆண்டு ஜூலை 12ம் தேதி ஃபுளாரன்ஸ் நகர் அருகே பசிஞ்ஞானோ எனுமிடத்தில் இயற்கை மரணமெய்தினார் புனிதர் யோவான். இவரை திருத்தந்தை மூன்றாம் செலஸ்டீன் 1193ம் ஆண்டு புனிதராக அறிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.