2014-10-21 15:50:05

நவம்பர் 28-30,2014 துருக்கியில் திருத்தந்தை


அக்.21,2014. வருகிற நவம்பர் 28 முதல் 30 வரை துருக்கி நாட்டில் திருப்பயணம் மேற்கொள்ளும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பயணத் திட்டங்கள் இச்செவ்வாயன்று பத்திரிகையாளர் கூட்டத்தில் வெளியிடப்பட்டன.
திருத்தந்தையின் துருக்கி நாட்டுத் திருப்பயணம் குறித்து விளக்கிய திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி அவர்கள், இத்திருப்பயண நிகழ்வுகள், அங்காரா, இஸ்தான்புல் ஆகிய இரு நகரங்களில் நடைபெறும் எனக் கூறினார்.
துருக்கி அரசுத்தலைவர், துருக்கி கிறிஸ்தவ ஒன்றிப்பு சபைத் தலைவர் முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயோ, துருக்கி ஆயர் பேரவைத் தலைவர் ஆகியோரின் அழைப்பின்பேரில் இத்திருப்பயணம் நடைபெறவுள்ளதாகவும் அருள்பணி லொம்பார்தி தெரிவித்தார்.
நவம்பர் 28ம்தேதி காலை 9 மணிக்கு உரோமையிலிருந்து புறப்படும் திருத்தந்தை, Ankara Esemboğa விமானநிலையத்தை மதியம் 1 மணிக்குச் சென்றடைவார். அன்று விமானநிலைய வரவேற்பு, அரசுத்தலைவர் சந்திப்பு, அரசு அதிகாரிகள், பிரதமர் சந்திப்பு போன்றவை இடம்பெறும்.
29ம் தேதி இஸ்தான்புல் சென்று புனித சோஃபியா அருங்காட்சியகம், சுல்தான் AHMET மசூதி, பேராலயத்தில் திருப்பலி, புனித ஜார்ஜ் பேராலயத்தில் கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வழிபாடு, முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயோ அவர்களைச் சந்தித்தல் போன்ற நிகழ்வுகள் இடம்பெறும்.
30ம் தேதி ஞாயிறன்று புனித ஜார்ஜ் பேராலயத்தில் வழிபாடு, முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயோ அவர்களுடன் மதிய உணவு ஆகியவற்றை முடித்து மாலை 6.40 மணிக்கு உரோம் வந்தடைவார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.