2014-10-20 15:53:24

புனிதரும் மனிதரே : புகழுக்கு அஞ்சி அடிக்கடி இடத்தை மாற்றியவர்(St. Hilarion)


ஹிலாரியோன் என்ற பாலஸ்தீனச் சிறுவனின் பெற்றோர் தங்களின் மகனைக் கல்வியில் சிறந்தவனாக்க விரும்பி, அக்காலத்தில் கல்விக்குச் சிறந்து விளங்கிய எகிப்து நாட்டின் அலெக்சாந்திரியாவுக்கு அவனை அனுப்பினர். அங்குச் சென்ற ஹிலாரியோனுக்கு அந்நகரின் திரையரங்குகளும், கேளிக்கை விளையாட்டுகளும், ஆடம்பரமான நண்பர்களும் கவர்ச்சியளிக்கவில்லை. ஆனால் அந்நகரின் கிறிஸ்தவர்களின் வாழ்க்கைமுறை அச்சிறுவனை ஈர்த்தது. அச்சமயத்தில் எகிப்தியப் பாலைநிலத்தில் கடும் தவ வாழ்க்கை வாழ்ந்த தூய அந்தோணியார் பற்றி எல்லாரும் வியந்து பேசுவதைக் கேட்டார் இச்சிறுவன். எனவே கிறிஸ்தவராக மாறி அவருடன் வாழ முடிவெடுத்து பாலைநிலம் சென்றார் ஹிலாரியோன். அப்போது ஹிலாரியோனுக்கு வயது பதினைந்து. அந்தோணியாரைத் தேடி மக்கள் கூட்டம் கூட்டமாய் வந்ததால், அவருடன் இரண்டு மாதங்கள் தங்கியிருந்த பின்னர் தனது சொந்த ஊரான Thabathaவுக்குத் திரும்பினார் ஹிலாரியோன். இவரிடம் ஒரேயொரு மயிராடையும், அந்தோணியார் கொடுத்த தோலாலான ஒரு மேலங்கியுமே இருந்தன. ஊரில் பெற்றோர் இறந்திருந்ததைக் கண்டு தனது சொத்துக்களை விற்று ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு, காசாவுக்கு அருகிலுள்ள Majuma பாலைவனம் சென்றார் இவர். ஒரு பக்கம் கடலையும், மறுபக்கம் சதுப்பு நிலத்தையும் கொண்ட அவ்விடம் வழிப்பறிக் கொள்ளையர்கள் நிறைந்தது. இது குறித்து அவரது உறவினர்கள் அவரை எச்சரித்தனர். ஆயினும் அங்கு குச்சிகளால் ஒரு சிறு குடிசை அமைத்து அந்தோணியார்போல் கடும் தவ வாழ்வு வாழத் தொடங்கினார் ஹிலாரியோன். தினமும் கதிரவன் மறைந்த பின்னர் 15 காய்ந்த அத்திப்பழங்களை மட்டுமே சாப்பிட்டார். சாத்தானின் பிடியிலிருந்து பலரை விடுவித்தார். மேலும் பல புதுமைகளையும் செய்தார். மக்களும் கூட்டம் கூட்டமாய் அவரிடம் வரத் தொடங்கினர். இதனால் தனிமையை நாடி மீண்டும் எகிப்து சென்றார்(கி.பி. 360). அங்கு அந்தோணியார் வாழ்ந்த இடங்களைத் தரிசித்தார். பின்னர் அலெக்சாந்திரியாவுக்கு அருகிலுள்ள Bruchium சென்றார். ஆனால் ஜூலியன் என்பவர், கிறிஸ்தவத்துக்கு எதிராகக் கிளம்பி இவரைக் கைது செய்ய முயற்சித்தான். இதனால் லிபியப் பாலைநிலம் சென்றார். பின்னர் சிசிலி சென்று, Pachinumக்கு அருகில் நீண்ட காலம் கடும் தவ வாழ்வு வாழ்ந்தார். இதற்கிடையே, இவரின் முந்தைய சீடரான Hesychius, இவரைத் தேடி அங்கு வந்தார். துறவி ஹிலாரியோன் அவர்களைத் தேடி மீண்டும் மக்கள் வரத் தொடங்கினர். இதனால் தனிமையை நாடி குரோவேஷியா நாட்டின் Dalmatiaவிலுள்ள Epidaurus சென்றார். இறுதியில் சைப்ரஸ் தீவு சென்று தனிமையான குகை ஒன்றில் வாழ்ந்து கி.பி.371ம் ஆண்டில் இறந்தார் ஹிலாரியோன். இத்தூயவரின் விழா அக்டோபர் 21. Thabathaல் கி.பி.291ம் ஆண்டில் பிறந்து வளர்ந்த இவரின் வாழ்க்கைக் குறிப்புக்களை தூய ஜெரோம் அவர்கள் எழுதி வைத்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.