2014-10-20 16:02:23

திருத்தந்தை : மத்தியக்கிழக்குப் பகுதியில் கிறிஸ்தவர்கள் இல்லா நிலையை எண்ணிப்பார்க்க முடியாது


அக்.20,2014. மத்தியக்கிழக்கு நாடுகளில் கிறிஸ்தவர்களின் இன்றைய நிலைகள் குறித்து தான் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளாதாக கர்தினால்கள் மற்றும் திருஅவைத் தந்தையர்களை இத்திங்களன்று திருப்பீடக் கூட்டத்தில் சந்தித்தபோது கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
குடும்பம் குறித்த ஆயர்கள் மாமன்றம் நிறைவுற்றதைத் தொடர்ந்து இத்திங்கள் காலை கர்தினால்கள் மற்றும் மத்தியக்கிழக்குப்பகுதி திருஅவைத் தந்தையர்களை ஓர் சந்திப்பிற்கு அழைத்திருந்தத் திருத்தந்தை, மத்தியக்கிழக்குப்பகுதியின் அமைதி மற்றும் நிலையானத்தன்மைக்கான ஏக்கத்தில் திருஅவையும் பங்குகொள்வதாகவும், முரண்பாடுகளுக்கான தீர்வுகளைப்பெற பேச்சுவார்த்தைகள், ஒப்புரவு மற்றும் அரசியல் உறுதிப்பாட்டைக் கொள்ளவேண்டும் என்பதற்கு ஊக்கமளிப்பதாகவும் கூறினார்.
இரண்டாயிரம் வருடங்களாக கிறிஸ்தவர்களின் இருப்பைக்கொண்டிருந்த மத்தியக்கிழக்குப் பகுதியில் தற்போது அவர்கள் இல்லா நிலையை எண்ணிப்பார்க்க முடியாது எனவும் குறிப்பிட்டத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இங்கு நடக்கும் தொடர் வன்முறைகள் குறித்தும், பலரின் பாராமுகம் குறித்தும் தன் ஆழ்ந்த கவலையையும் வெளியிட்டார்.
இப்பிரச்னைக்குத் தீர்வுகாண, நம் செபம் மட்டும் போதாது, அனைத்துலக சமுதாயத்தின் தலையீடும் தேவைப்படுகின்றது எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.