2014-10-18 15:34:14

குடும்பங்கள் இல்லாமல் சிறார் தனித்துவிடப்படுவது புதிய மனிதாபிமானப் பேரிடர்


அக்.18,2014. உலக அளவில் பெருமளவான குழந்தைகள் குடும்பங்கள் இல்லாமல் தனித்துவிடப்படுவது ஒரு புதிய மனிதாபிமானப் பேரிடர் என்றுரைத்த அதேவேளை, இப்பேரிடரை அகற்றுவதற்குத் திருஅவை நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கூறினார் உக்ரேய்ன் பேராயர் Sviatoslav Shevchuk.
இன்றைய உலகில், ஒரு தந்தை, தாயால் அமைந்துள்ள குடும்பங்களில் ஏறக்குறைய 70 விழுக்காட்டுப் பிள்ளைகள் வளர்வதில்லை, இது ஒருவகையான மனிதாபிமானப் பேரிடர் என்று கூறினார் பேராயர் Shevchuk.
இச்சவாலை எதிர்கொள்ளும் திருஅவை, குடும்பங்கள் இல்லாமல் வாழ்கின்ற இளையோர் வளர்வதற்கு அவர்களுடன் இருந்து உதவி செய்வதோடு, இந்த இளையோர் தங்களின் சொந்தக் குடும்பங்களை உருவாக்குவதற்கும் உதவ வேண்டுமெனக் கூறினார் பேராயர் Shevchuk.
குடும்பம் பற்றிய உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றத்தில் கலந்துகொள்ளும் உக்ரேய்ன் கிரேக்க கத்தோலிக்கத் திருஅவைத் தலைவரான பேராயர் Shevchuk அவர்கள் வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார்.
திருமணம் என்னும் அருளடையாளத்தில் தூய ஆவியாரின் பங்கு கண்டுணரப்பட வேண்டுமென்றும், தம்பதியர் தங்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் காயங்களைக் குணப்படுத்தி, திருமணத்தைப் பயனுள்ள வகையில் வாழ்வதற்கு உதவிகள் வழங்கப்பட வேண்டுமென்றும் கூறினார் உக்ரேய்ன் பேராயர் Shevchuk.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.