2014-10-18 15:33:59

குடும்பங்களின் உரிமைகள் ஊக்குவிக்கப்பட அரசுகளுக்கும், அனைத்துலக நிறுவனங்களுக்கும் மாமன்றத்தந்தையர் அழைப்பு


அக்.18,2014. பொது நன்மைக்காக, குடும்பங்களின் உரிமைகள் ஊக்குவிக்கப்பட வேண்டுமென்று உலகின் அரசுகளுக்கும், அனைத்துலக நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளனர் மாமன்றத்தந்தையர்.
குடும்பம் பற்றிய உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றத்தின் இறுதி நாளான இச்சனிக்கிழமையன்று மாமன்றத்தந்தையர் வெளியிட்டுள்ள செய்தியில், ஏழைக் குடும்பங்கள், எவ்வித நம்பிக்கையுமின்றி அலைந்து திரியும் புலம்பெயர்ந்தோர், கடினமான பயணம் மேற்கொண்டு கரையை அடையும் குடியேற்றதாரர், விசுவாசம், மனித மற்றும் ஆன்மீக விழுமியங்களுக்காக நசுக்கப்படும் மக்கள் ஆகிய அனைவரையும் நினைவுகூர்ந்துள்ளனர்.
வன்முறை, தவறாகப் பயன்படுத்தல், மனித வணிகம் போன்றவற்றால் துன்புறும் பெண்களையும் நினைவுகூர்ந்துள்ள மாமன்றத்தந்தையர், உரிமை மீறல்களை எதிர்நோக்கும் சிறார் பாதுகாக்கப்பட்டு முன்னேற்றப்பட வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஒவ்வொருவரையும் வரவேற்பதற்குத் தனது கதவுகளை எப்போதும் திறந்து வைத்திருக்கும் ஓர் இல்லமாக தமது திருஅவை இருக்குமாறு கிறிஸ்து விரும்புகிறார் என்று அச்செய்தியில் கூறியுள்ள மாமன்றத்தந்தையர், தம்பதியரோடும், குடும்பங்களோடும் உடனிருந்து அவர்களின் காயங்கள் குணமடைவதற்கு உதவும் மேய்ப்பர்கள், பொதுநிலை விசுவாசிகள், சமூகங்கள் ஆகிய அனைவருக்கும் தங்களின் நன்றியையும் தெரிவித்துள்ளனர்.
இறைவனோடும் அடுத்திருப்பவரோடும் உறவை இணைப்பது ஞாயிறு திருப்பலி என்பதால் அதில் பங்கெடுப்பதன் அவசியம், இன்னும், திருமண முறிவில் வாழ்வோர், மறுதிருமணம் செய்துகொண்டோர் ஆகியோர் அருளடையாளங்களில் பங்கெடுப்பது குறித்து சிந்தித்ததாகவும் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளனர் மாமன்றத்தந்தையர்.
இம்மாதம் 5ம் தேதி தொடங்கிய இரு வார மாமன்றத்தில், உலகின் அனைத்துக் கண்டங்களிலிருந்தும் 253 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.