2014-10-17 15:49:50

திருத்தந்தை : மக்கள் மத்தியிலும், நாடுகளுக்கு இடையேயும் ஒற்றுமை மிகவும் தேவை


அக்.17,2014. உலகில் நிலவும் பிரிவினைகளையும் சண்டைகளையும் தவிர்க்கும்பொருட்டு மக்கள் மத்தியிலும், நாடுகளுக்கு இடையேயும் ஒற்றுமை மிகவும் தேவைப்படுகின்றது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
உலகில் இடம்பெறும் பிரச்சனைகளின் சுமை ஏழைகளின்மீதே அதிகம் விழுவதால், எக்காலத்தையும்விட இக்காலத்தில் மக்கள் மத்தியிலும், நாடுகளுக்கு இடையேயும் ஒற்றுமை மிகவும் அவசியம் என்று கூறினார் திருத்தந்தை.
அக்டோபர் 16, இவ்வியாழனன்று கடைப்பிடிக்கப்பட்ட உலக உணவு தினத்தை முன்னிட்டு, ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனமான FAOஇயக்குனர் José Graziano da Silva அவர்களுக்கு அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இரத்தம் சிந்தும் மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள எல்லா வயது மக்களின் துன்பங்களையும் நினைத்துப் பார்க்குமாறு கேட்டுள்ள திருத்தந்தை, உலகில் பசிப்பிணியைப் போக்குவது மட்டும் போதாது, மாறாக, வேளாண்மைப் பொருள்களின் உற்பத்தி மற்றும் அவற்றை வணிகம் செய்வதில் உலகளாவிய சட்டங்களில் மாற்றம் தேவை என்றும் வலியுறுத்தியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.