2014-10-17 15:50:13

ஆசியா பீபியின் விடுதலைக்காக பாகிஸ்தானில் செபம்,உண்ணாநோன்பு


அக்.17,2014. பாகிஸ்தானில் தெய்வநிந்தனைக் குற்றத்தின்பேரில் 2010ம் ஆண்டில் ஆசியா பீபி என்ற கிறிஸ்தவத் தாய்க்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை மீண்டும் உறுதிசெய்யப்பட்டுள்ளதை முன்னிட்டு அப்பெண்ணுக்காகச் செபிக்குமாறு கேட்டுள்ளார் பாகிஸ்தான் ஆயர் ஒருவர்.
ஐந்து குழந்தைகளுக்குத் தாயான ஆசியா பீபிக்கு, 2010ம் ஆண்டு நவம்பரில் லாகூர் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்த மரணதண்டனையை இவ்வியாழனன்று விசாரித்த லாகூர் உயர் நீதிமன்றம் உறுதிசெய்துள்ளதையடுத்து அப்பெண்ணுக்குத் தங்களின் தோழமையுணர்வைச் செபத்தின் வழியாகக் காட்டுமாறு கேட்டுள்ளார் இஸ்லாமபாத் ஆயர் ரூஃபின் அந்தோணி.
இத்தீர்ப்பு வெளியானதையடுத்து பல்வேறு மனித உரிமை ஆர்வலர்களும், பொது மக்களும், கிறிஸ்தவர்களும் ஆசியா பீபிக்கு நீதி கிடைக்க வேண்டுமெனப் போராடி வருவதோடு, தங்களின் ஒருமைப்பாட்டுணர்வையும் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே, ஆசியா பீபியின் வழக்கறிஞர்கள் இவ்வழக்கை உச்ச நீதிமன்றத்துக்கு எடுத்துச்செல்லத் தீர்மானித்துள்ளனர்.
மேலும், ஆசியா பீபிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக, பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள் வருகிற ஞாயிறன்று, செபம் மற்றம் உண்ணாநோன்பை கடைப்பிடிக்கவுள்ளனர். இதே கருத்துக்காக, ஏற்கனவே பல தடவைகள் செபம் மற்றும் உண்ணாநோன்பை அவர்கள் கடைப்பிடித்துள்ளனர்.

ஆதாரம் : AsiaNews







All the contents on this site are copyrighted ©.