2014-10-17 14:38:49

அக்.18,2014. புனிதரும் மனிதரே : திருஅவைப் பணியில் பேரரசர் (St. Henry II)


ஜெர்மனியின் பவேரியா ஆட்சியாளர் ஹென்றிக்கும், பர்கண்டியின் மன்னர் கொன்ராடின் மகள் சிசெலாவிற்கும் 972ம் ஆண்டில் பிறந்தவர் மன்னர் இரண்டாம் ஹென்றி. இவரின் இளம்வயதில் ஆசிரியராக இருந்து வழிநடத்தியவர் பின்னாளில் புனிதராக அறிவிக்கப்பட்ட ஆயர் Wolfgang. 995ம் ஆண்டு தன் தந்தையின் மறைவுக்குப்பின் பவேரியாவின் ஆட்சியாளரான இரண்டாம் ஹென்றி, 1002ல் உரோமைப் பேரரசராக தெர்ந்தெடுக்கப்பட்டார். இவர் திருமணம் புரிந்திருந்தாலும் இவரும் இவர் மனைவியும் கன்னிமை வாழ்வைக் கடைபிடித்தனர். உரோமைப் பேரரசராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், தன் மனைவி Cunegundesடன் 1014ம் ஆண்டு உரோம் நகர் சென்று திருத்தந்தை எட்டாம் பெனடிக்டிடமிருந்து பேரரசருக்குரிய மணிமகுடத்தைப் பெற்றார்.
திருச்சபையின் நலனுக்காகவும், வளர்ச்சிக்காகவும் போர்களில் ஈடுபடத் தயங்காதவர் இவர். துறவற மடத் தலைவர்களையும், ஆயர்களையும் நியமனம் செய்யும் அதிகாரத்தை பெற்றிருந்த இவர், உரோம் நகரில் ஏற்பட்ட கலகத்தை நசுக்க திருத்தந்தை எட்டாம் பெனடிக்டுக்கு உறுதுணையாயிருந்தார். இவர் மற்ற நாடுகளில் அமைதி நிலவ அரும்பாடுபட்டார்.
"அழிந்து போகும் செல்வத்தை துறந்துவிட்டு என்றும் அழியா, நிலையான செல்வத்தை வான்வீட்டில் சேர்த்து இடத்தை தக்க வைத்துக்கொள்ளவேண்டும்" என்பதை இவர் தன் நாட்டு மக்களுக்கு அடிக்கடி கூறிவந்தார். இவ்வுலகில் நாம் பெறும் புகழ், புகையாக மறைந்துவிடும். எனவே நிலையான பேரின்பத்தை அடைய முயற்சிக்கவேண்டும் என்று அடிக்கடி கூறுவார். இறைஇரக்கத்தைப் பெற, ஜெர்மனியில் பெரிய பெரிய ஆலயங்களைக் கட்டினார். அவற்றின் பராமரிப்பிற்காக செல்வங்களை வாரி வழங்கினார். பம்பெர்க் பேராலயத்தைக் கட்டியவர் இவரே. தாழ்ச்சி, நீதியுணர்வு, மன்னிப்பு, ஆழ்ந்த தியான வாழ்வு போன்றவை இவரில் நிறைந்திருந்தன. 1024ன் ஆண்டு இறைபதம் சேர்ந்தார் பேரரசர் புனித இரண்டாம் ஹென்றி. .இவரின் துணைவியார் Cunegundescdம் புனித வாழ்க்கை வாழ்ந்து புனிதர் பட்டம் பெற்றார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.