2014-10-16 15:58:19

முதல் உலகப் போரின் வரலாறு நமக்குப் பாடங்களைச் சொல்லித்தருகிறது - கர்தினால் பரோலின்


அக்.16,2014. அமைதியின் அடிப்படையில் உருவாகும் ஒரு கலாச்சாரத்தைக் கட்டியெழுப்ப முதல் உலகப் போரின் வரலாறு நமக்குப் பாடங்களைச் சொல்லித்தருகிறது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
முதல் உலகப் போரின் முதல் நூற்றாண்டு நினைவாக, "தேவையற்ற உயிர் கொலைகள்" என்ற தலைப்பில், இப்புதன் மாலை வத்திக்கானில் துவங்கிய பன்னாட்டு கருத்தரங்கில் உரையாற்றிய திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரொ பரோலின் அவர்கள், இவ்வாறு கூறினார்.
முதல் உலகப் போரின்போது திருத்தந்தையாக பணியாற்றிய புனித பத்தாம் பயஸ் அவர்கள் வேதனையுடன் விடுத்த வேண்டுகோள்களுக்கு இவ்வுலகம் செவிசாய்க்க மறுத்தது என்று கூறிய கர்தினால் பரோலின் அவர்கள், தொடர்ந்து பல்வேறு திருத்தந்தையர் உலக அமைதிக்காக மேற்கொண்ட முயற்சிகளை தன் உரையில் சுட்டிக்காட்டினார்.
புனிதத் திருத்தந்தை பத்தாம் பயஸ் அவர்களைத் தொடர்ந்து திருஅவைத் தலைமைப் பொறுப்பேற்ற திருத்தந்தை 15ம் பெனடிக்ட் துவங்கி, தற்போதையத் திருத்தந்தை பிரான்சிஸ் முடிய அனைத்துத் திருத்தந்தையரும் உலகில் அமைதியை வளர்க்கும் வகையில் வெளியிட்ட செய்திகளை கர்தினால் பரோலின் அவர்கள் தன் உரையில் மேற்கோள்களாகக் குறிப்பிட்டார்.
"தேவையற்ற உயிர் கொலைகள்" என்று திருத்தந்தை 15ம் பெனடிக்ட் அவர்கள் முதல் உலகப் போரைக் குறித்து கூறிய வார்த்தைகளை தலைப்பாகக் கொண்டு, இப்புதனன்று வத்திக்கானில் துவங்கியுள்ள பன்னாட்டுக் கருத்தரங்கு, அக்டோபர் 17, இவ்வேள்ளியன்று நிறைவு பெறுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.