2014-10-16 15:18:56

புனிதரும் மனிதரே : கத்தோலிக்கத்தில் நிலைத்திருக்க நிபந்தனை விதித்தவர் (St. Richard Gwyn)


பிரித்தானியாவின் வேல்ஸில் 1537ம் ஆண்டு பிறந்த Richard Gwyn அவர்கள், ஆங்லிக்கன் கிறிஸ்தவ சபையைச் சார்ந்தவர். இங்கிலாந்தில் தூய யோவான் கல்லூரியின் அதிபராக இருந்த கத்தோலிக்கரான முனைவர் ஜார்ஜ் புல்லோக் அவர்களின் உதவியுடன் இவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்தபோது கத்தோலிக்கத்துக்கு மனம் மாறினார். இவர் ஓர் ஆசிரியர். 1558ம் ஆண்டில், பிரித்தானியாவை அரசி முதலாம் எலிசபெத் ஆட்சி செய்யத் தொடங்கிய காலம் அது. எனவே ரிச்சர்ட் ஆங்லிக்கன் கிறிஸ்தவ சபையில் மீண்டும் இணையும்படி, ஆலயத்தில் வைத்து பலவிதங்களில் வதைக்கப்பட்டார். இறுதியில் ஆங்லிக்கன் சபையில் இருப்பதற்கு இணங்கினார். ஆனால் அவர் ஆலயத்தைவிட்டு வெளியே வரும்போது காகங்களின் கூட்டமும், பருந்துகளும் ரிச்சர்டை மொய்த்துக்கொண்டு காயப்படுத்திக்கொண்டே அவர் வீடுவரை சென்றன. இதனால் இவர் நோய்வாய்ப்பட்டு உயிருக்காகப் போராடினார். இவரது மனமும் கடுந்துன்பம் அனுபவித்தது. இந்த வேதனையில் ரிச்சர்ட், இறைவன் தன்னைக் காப்பாற்றினால் தான் கத்தோலிக்கத்துக்குத் திரும்புவதாகத் தனக்குத்தானே சொல்லிக்கொண்டார். ரிச்சர்ட் தனது எண்ணப்படியே உயிர் பிழைத்தார். கத்தோலிக்க விசுவாசத்தில் உறுதியாய் இருந்தார். இதனால் கைதுகளையும் கடும் அபராதங்களையும் இவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இதிலிருந்து தப்பிப்பதற்காக இவர் தனது வீட்டையும், பள்ளியையும் மாற்றினார், இறுதியில் 1579ம் ஆண்டில் கைதுசெய்யப்பட்டார். அதிலிருந்து தப்பித்து ஒன்றரை வருடங்கள் தலைமறைவானார். பின்னர் மீண்டும் கைதுசெய்யப்பட்டு Wrexham சிறையில் நான்காண்டுகள் இருந்தார். அரசத் துரோகம் என்ற குற்றத்தின்பேரில், குதிரைக் காலில் கட்டி இழுக்கப்பட்டார், உடல் உறுப்புகள் வெட்டப்பட்டார். பின்னர் 1584ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதி கத்தோலிக்க விசுவாசத்துக்காகக் தூக்கிலிடப்பட்டார். அரசத் துரோகக் குற்றவாளிகளுக்கு இத்தகைய தண்டனை கொடுக்கும் பழக்கம் இங்கிலாந்தில் 1351ம் ஆண்டிலிருந்து பழக்கத்தில் இருந்தது. ரிச்சர்ட் வொய்ட்(Richard White) எனவும் அழைக்கப்பட்ட இவர் வேல்சின் முதல் மறைசாட்சியாவார். 1970ம் ஆண்டு திருத்தந்தை 6ம் பவுல், இங்கிலாந்து மற்றும் வேல்சின் நாற்பது மறைசாட்சிகளைப் புனிதர்களாக அறிவித்தார். அவர்களில் ஒருவரான Richard Gwyn அவர்களின் விழா அக்டோபர் 17. இவருக்கு கத்ரீன் என்ற மனைவியும், ஆறு குழந்தைகளும் இருந்தனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.