2014-10-15 16:43:44

முதல் ஆசிய அனைத்துலக கருத்தரங்கு : “மனித வாழ்வு இன்றி நீதி கிடையாது"


அக்.15,2014. ஆசியாவில் மரணதண்டனை நிறைவேற்றும் பழக்கத்தை ஒழிக்கும் நோக்கத்தில், "மனித வாழ்வு இன்றி நீதி கிடையாது" என்ற தலைப்பில், பிலிப்பீன்சின் மனிலாவில் இம்மாதம் 27,28 தேதிகளில் முதல் ஆசிய அனைத்துலக கருத்தரங்கு நடைபெறவுள்ளது.
உரோம் சான் எஜிதியோ கத்தோலிக்க அமைப்பும், பிலிப்பீன்ஸ் நீதித்துறையும் சேர்ந்து நடத்தும் இக்கருத்தரங்கில், பல்வேறு நாடுகளின் நீதித்துறை அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும், நகர மேயர்களும், சமயப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு, இந்தியா, இலங்கை, இந்தோனேசியா, ஜப்பான், மங்கோலியா, லாவோஸ், கம்போடியா, வியட்நாம், பிலிப்பீன்ஸ் உட்பட பல நாடுகளில் மனித உரிமைகளையும் நீதியையும் நிலைநாட்டுவதில் எதிர்நோக்கப்படும் சவால்களைப் பகிர்ந்துகொள்வார்கள். மரணதண்டனை நிறைவேற்றுவதை நிறுத்தத் தொடங்கியுள்ள அல்லது அதனை நிறுத்துவதற்கான முயற்சியைத் தொடங்கவுள்ள நாடுகளுடன் உரையாடலைத் தொடங்குவதற்கு, இக்கருத்தரங்கு ஒரு தளமாக அமையும் என, இக்கருத்தரங்கை ஏற்பாடு செய்பவர்கள் கூறியுள்ளனர்.
ஆசியாவின் கலாச்சார மற்றும் சமய மரபுகளை முழுவதும் மதித்து, மனித உரிமைகளுக்கும், விழுமியங்களுக்கும் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டுமென்று ஆசிய நாடுகளுக்கு இக்கருத்தரங்கில் வலியுறுத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது
உலகில் மரணதண்டனையை ஒழிப்பதற்கு 2005ம் ஆண்டில் முதல் உலகளாவிய நடவடிக்கையைத் தொடங்கிய சான் எஜிதியோ கத்தோலிக்க அமைப்பு, தற்போது முதல்முறையாக, ஆசிய அனைத்துலக கருத்தரங்கை நடத்தவுள்ளது.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.