2014-10-15 16:43:20

மலாவியில் திருமணத்திற்காகச் சிறுமிகள் கல்வியைக் கைவிடல்


அக்.15,2014. ஆப்ரிக்காவின் மலாவி நாட்டில் இடம்பெறும் இளம் வயதுத் திருமணங்களால் 2010ம் ஆண்டுக்கும், 2013ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் 27 ஆயிரத்துக்கு அதிகமான சிறுமிகள் ஆரம்பப் பள்ளிக்குச் செல்வதை நிறுத்தியுள்ளனர் என்று அந்நாட்டு ஆயர் பேரவை கூறியது.
இவ்வாண்டின் உலக சிறுமிகள் தினத்தன்று(அக்.11) இவ்வாறு தகவல் வெளியிட்டுள்ள, மலாவி ஆயர் பேரவையின் கல்விப் பணிக்குழு, மலாவியில் சிறுமிகள் திருமணம் நிறுத்தப்படவில்லையெனில், 2015ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் ஆரம்பக்கல்வி என்ற ஐ.நா.வின் மில்லென்யத் திட்டம் இந்நாட்டில் நிறைவேறாது என்று கூறியது.
மலாவியில் இடம்பெறும் பாலியல் திருமணங்கள், சிறுமிகள் கல்வி பெறுதற்கான முக்கிய தடைகளில் ஒன்றாக இருக்கின்றது என்றும், இந்நாட்டில் சிறுமிகள் 18 வயதுக்குள்ளேயே திருமணம் செய்துவைக்கப்படுகின்றனர் என்றும் அப்பணிக்குழு கூறியது.
மலாவியில் பெண்களின் அதிகாரப்பூர்வ திருமண வயது 15. இந்த வயது வரம்பை 18 ஆக உயர்த்துவதற்கு, கத்தோலிக்கத் திருஅவை எடுக்கும் நடவடிக்கைக்கு, சமயக் குழுக்களும், பழங்குடியினத் தலைவர்களும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுள்ளது அப்பணிக்குழு.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.