2014-10-15 16:42:30

திருத்தந்தை : இறைவனின் பாதை, ஒருவர் ஒருவரை அன்புகூரும் பாதை


அக்.15,2014. இறைவனின் பாதை, ஒருவர் ஒருவரை அன்புகூரும் பாதையென்றும், நம்மைச் சுற்றி நடப்பவைகளை முழுமையாய் அறிவதற்கு அதிகமாகச் செபிக்க வேண்டுமென்றும் புனித அவிலா தெரேசா கூறுகிறார் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.
இஸ்பெயின் நாட்டின் அவிலா நகரில் புனித தெரேசா பிறந்ததன் 500ம் ஆண்டையொட்டி ஜூபிலி ஆண்டைத் தொடங்கியுள்ள இஸ்பெயின் ஆயர்களுக்கு இப்புதனன்று செய்தி அனுப்பியுள்ள திருத்தந்தை, புனித தெரேசாவிடம் விளங்கிய, மகிழ்வில் வாழ்வது, செபம், தோழமையுணர்வு, தனது காலத்தின் எதார்த்தங்களோடு தொடர்பு ஆகிய பண்புகளை விளக்கியுள்ளார்.
தன் சகோதரிகள் மகிழ்வோடு தொண்டுபுரியவும், உண்மையான புனிதத்துவம் மகிழ்ச்சியாக இருப்பதே என்பதையும், கடவுளைக் காண்பதிலே இன்பம் உள்ளது என்பதையும் புனித தெரேசா உணர்த்தியுள்ளார் என்றும் தன் செய்தியில் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.
நம்பிக்கையற்ற நிலையை மேற்கொண்டு நல்ல முயற்சிகளைத் தொடங்குவதற்குச் செபம் உதவுகின்றது, தாழ்மையின் உண்மையில் நடக்கவும், தன்னை அன்புகூருவதிலிருந்து நம்மை விடுவித்து பிறரை அன்பு கூரவும் இப்புனிதரின் வாழ்வு உணர்த்துகின்றது எனவும் திருத்தந்தை கூறியுள்ளார்.
கார்மேல் ஆதீனத் துறவு இல்லங்களைச் சீர்திருத்திய புனித தெரேசா, அவிலா நகரில் 1515ம் ஆண்டு மார்ச் 28ம் தேதி பிறந்தார். திருஅவையின் மறைவல்லுனராகிய இப்புனிதர் பிறந்த 5ம் நூற்றாண்டுக் கொண்டாட்டங்களை இப்புதனன்று தொடங்கியுள்ளது இஸ்பெயின் தலத்திருஅவை. புனித அவிலா தெரேசா விழா அக்டோபர் 15.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.