2014-10-15 16:43:10

EU அவை எடுக்கும் தீர்மானங்கள், வன்முறையால் மக்கள் துன்புறுவதைத் தடுப்பதாய் இருக்க வேண்டும்


அக்.15,2014. கனிம வளங்களைப் பொறுப்புள்ள வகையில் கையாள்வது குறித்த சட்டம் குறித்து விவாதிப்பதற்கு ஐரோப்பிய பாராளுமன்றம் தயாரித்துவரும்வேளை, இச்சட்டம், இவ்வளங்களைப் பயன்படுத்தும் நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் அமைவதற்கு ஆவன செய்யுமாறு உலகின் எழுபது கத்தோலிக்க ஆயர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இவ்விவகாரம் குறித்து CIDSE என்ற, கத்தோலிக்க வளர்ச்சித்திட்ட நிறுவனங்களின் பன்னாட்டுக் கூட்டமைப்பு எடுத்த முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ள ஆயர்கள், ஐரோப்பிய சமுதாய அவை எடுக்கும் தீர்மானங்கள், வன்முறையால் மக்கள் துன்புறுவதைத் தடுப்பதாய் இருக்க வேண்டுமெனக் கேட்டுள்ளனர்.
இயற்கை வளங்களை வியாபாரம் செய்வதில் அறநெறிக் கோட்பாடுகள் பின்பற்றப்படுமாறும், உலகில் வன்முறை மோதல்களுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் நிதியுதவி செய்வது தடை செய்யப்படுமாறும் ஐரோப்பிய சமுதாய அவையை வலியுறுத்தியுள்ளனர் ஆயர்கள்.
மேலும், ஐரோப்பிய சமுதாய அவை தற்போது எடுத்துள்ள நடவடிக்கைகள், ஆயுதம் தாங்கிய மோதல்களுக்கு கனிமவள நிறுவனங்கள் உதவி செய்வதைத் தடைசெய்வதாய் இல்லையெனவும் CIDSE பன்னாட்டுக் கூட்டமைப்பு குறை கூறியுள்ளது.
கனிம வளங்களைப் பொறுப்புள்ள வகையில் கையாள்வது குறித்து கடந்த மார்ச் மாதம் ஐரோப்பிய சமுதாய அவை முன்வைத்துள்ள பரிந்துரைகளை விவாதிப்பதற்கு ஐரோப்பிய பாராளுமன்றம் தயாரித்துவருகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.