2014-10-14 16:22:54

மலேசியாவில் விசுவாசத்தை இழந்தவர்க்கும் இளையோருக்கும் திருஅவையின் பணி தேவைப்படுகின்றது


அக்.14,2014. மலேசியாவில் திருஅவையை விட்டு விலகியவர்களுக்கும், இளையோருக்கும் மறைக்கல்வி வழங்குவது தனது மேய்ப்புப்பணியில் முதலிடம் பெறும் என, கோலாலம்பூரின் புதிய பேராயர் Julian Leow Beng Kim கூறினார்.
கத்தோலிக்க விசுவாசத்தை இழந்தவர்கள், இளையோர், சமூகத்தில் கடைநிலையில் இருப்பவர்கள், வலுவிழந்தவர்கள் ஆகியோருக்கான மேய்ப்புப்பணியில் தான் அக்கறை காட்டவிருப்பதாகத் தெரிவித்தார் பேராயர் Julian.
பேராயர் Julian அவர்கள், கடந்த வாரத்தில் கோலாலம்பூரின் புதிய பேராயராகப் பணியேற்ற திருப்பலியில், மலேசியா, புருனெய், சிங்கப்பூர், தாய்லாந்து, இலங்கை, பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து ஏறக்குறைய 18 ஆயர்கள் கலந்துகொண்டனர்.
மலேசியாவில் கிறிஸ்தவ சிறுபான்மையினர் குறிவைத்து தாக்கப்பட்டு வருகின்றனர். கடந்த சனவரியில் 300 விவிலியங்கள் பறிமுதல் செய்யப்பட்டன, கிறிஸ்தவக் கல்லறைகள் சேதமாக்கப்பட்டன மற்றும் ஆலயங்களுக்குத் தீ வைக்கப்பட்டன.
கோலாலம்பூர் உயர்மறைமாவட்டத்தில் 40 பங்குகளும் 1,80,000 கத்தோலிக்கரும் உள்ளனர்.

ஆதாரம் : AsiaNews







All the contents on this site are copyrighted ©.