2014-10-14 15:34:41

மறைசாட்சியாக மரணமடைய விரும்பிய சிறுமி


7 வயதான சிறுமி தெரேசா, தன் சகோதரன் ரொதெரிகோவுடன் (Roderigo) ஒரு நாள் யாருக்கும் தெரியாமல் வீட்டைவிட்டுக் கிளம்பினார். அவர்கள் இருவரும் ஆப்ரிக்கா சென்று, அங்கு வாழும் மூர் (Moor) இனத்தவரால் தலை வெட்டுண்டு, மறைசாட்சிகளாக இறப்பதற்காக வீட்டைவிட்டுக் கிளம்பினர். ஊர் எல்லையில் அவர்களைச் சந்தித்த அவர்களது மாமா, இருவரையும் பத்திரமாக வீடு கொணர்ந்து சேர்த்தார்.
ஸ்பெயின் நாட்டில், அவிலா என்ற ஊரில், 1515ம் ஆண்டு பிறந்த தெரேசா, சிறுவயது முதல் பல்வேறு புனிதர்களின் வாழ்வால் ஈர்க்கப்பெற்றார். குறிப்பாக, மறைசாட்சிகளின் வீரமிக்க வாழ்வு அவரை அதிகம் கவர்ந்ததால், தானும் ஒரு மறைசாட்சியாகும் உறுதிபூண்டார்.
மறைசாட்சியாக இறப்பதற்கு அவர் தன் 7வது வயதில் எடுத்த முதல் முயற்சி வெற்றியடையாததால், தன் தம்பியுடன் சேர்ந்து அடுத்த முயற்சியை மேற்கொண்டார். அதாவது, கடுந்தவம் ஆற்றும் துறவிகளைப் போல வாழ்வதற்கு, தங்கள் வீட்டுத் தோட்டத்திலேயே கற்களாலும், கட்டைகளாலும் சிறு அறைகளைக் கட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இம்முயற்சிகளை மேற்கொண்ட தெரேசா, தன் 20வது வயதில் கார்மேல் துறவுச் சபையில் இணைந்தார். உலகத் தொடர்புகளிலிருந்து விலகி, கடுந்தவமும், செபமும் மேற்கொள்ளவேண்டிய அச்சபையின் துறவிகள் மிக எளிதான வாழ்வை மேற்கொண்டதைக் கண்டு, அத்துறவுச் சபையில் சீர்திருத்தங்களைக் கொணர தெரேசா போராடினார். வெற்றியும் கண்டார்.
47 ஆண்டுகள் இவர் வாழ்ந்த துறவு வாழ்வில், பல அற்புதமான நூல்களை எழுதினார். 1582ம் ஆண்டு, தன் 67வது வயதில் இவர் இறைவனடி சேர்ந்தார். 40 ஆண்டுகளுக்குப் பின்னர், 1622ம் ஆண்டு திருத்தந்தை 15ம் கிரகரி அவர்கள், இவரைப் புனிதராக உயர்த்தினார். 1970ம் ஆண்டு, திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், அவிலா நகர் புனித தெரேசா அவர்களை, மறைவல்லுனர் என்று அறிவித்தார். புனித தெரேசாவின் திருநாள் அக்டோபர் மாதம் 15ம் தேதி சிறப்பிக்கப்படுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.