2014-10-14 16:22:28

மத்திய கிழக்குப் பகுதியின் சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு அவசியம், ஐ.நா.வில் திருப்பீடம்


அக்.14,2014. உலக நாடுகளின் சட்டம் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளில், ஒவ்வொரு மனிதரின் தவிர்க்க இயலாத மாண்பும், மதிப்பும் முன்னுரிமை பெற வேண்டுமென்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் ஐ.நா.வில் கூறினார்.
சட்டத்தின் விதிமுறை என்ற தலைப்பில் நியுயார்க் ஐ.நா. தலைமையகத்தில், நடந்த 69வது அமர்வில் இத்திங்களன்று உரையாற்றிய, ஐ.நா.வுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் Bernardito Auza அவர்கள், அனைத்துச் சட்டங்களின் முக்கிய கூறு, மனிதரின் மாண்பைப் பாதுகாத்து பொதுநலனை ஊக்குவிப்பதாய் இருக்க வேண்டுமென்று கூறினார்.
நாடுகள் இத்தகைய பாதுகாப்புக்கு உறுதி வழங்காத பட்சத்தில், அனைத்துலக சமுதாயம், ஐ.நா. அறிக்கைக்கு உட்பட்டு, சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்றும் உரையாற்றினார் பேராயர் Auza மத்திய கிழக்குப் பகுதியின் சமய மற்றும் சிறுபான்மையினரின் நிலைமை குறித்தும் அனைத்துலக சமுதாயத்துக்கு எடுத்துரைத்த பேராயர் Auza அவர்கள், இப்பகுதி மக்கள் தங்களின் பாதுகாப்புக்காக ஐ.நா.வின் உடனடி நடவடிக்கைகளை எதிர்நோக்கி உள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.