2014-10-13 15:08:19

புனிதரும் மனிதரே : எதிரியால் வாழ்க்கை வரலாறு எழுதப்பட்டவர் (St.Callistus I)


புனித திருத்தந்தை முதலாம் கலிஸ்துஸ் பற்றி உலகினர் அறிவதற்கு, அவரின் எதிரியான ஹிப்போலிட்டஸ் என்பவர் எழுதி வைத்துள்ள குறிப்புக்களைத் தவிர வேறு எதுவும் இல்லை எனச் சொல்லப்படுகின்றது. திருத்தந்தை கலிஸ்துஸ்க்கு எதிரியாகச் செயல்பட்ட ஹிப்போலிட்டசும் ஒரு புனிதரே. 18 ஆண்டுகள் எதிர்த் திருத்தந்தையாக இருந்துகொண்டு திருத்தந்தை கலிஸ்துஸ்க்குத் தொல்லை கொடுத்துக்கொண்டே இருந்தார். திருத்தந்தை Zephyrinus இறந்ததும் தான் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படுவோம் என ஹிப்போலிட்டஸ் நம்பினார். ஆனால் 217ம் ஆண்டில் கலிஸ்துஸ் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டங்கள், விதிமுறைகள் இவற்றை அனைவரும் ஒழுங்காய்க் கடைப்பிடிக்கவேண்டுமென்பதில் ஹிப்போலிட்டஸ் மிகவும் கண்டிப்பானவர். விபசாரம், கொலை, மணமாகமலே பாலியல் உறவு போன்ற குற்றங்களைச் செய்தவர்களிடம் ஆதிகாலத் திருஅவை மிகவும் கொடூரமாய் நடந்துகொண்டது. ஆனால் திருத்தந்தை கலிஸ்துஸ், மனந்திரும்பும் பாவிகள்மீது மிகுந்த கருணை காட்டி, இவர்கள் பொதுவில் மன்னிப்புக் கேட்ட பின்னர் திருஅவைக்குள் சேர்த்துக்கொண்டார். திருத்தந்தை கலிஸ்துஸ் காட்டிய கருணை, திருஅவை உறுப்பினர்களுக்குள் அனைவரும் சமம் என்ற உணர்வை உருவாக்கியது. அதோடு விடுதலையடைந்த மக்களுக்கும், அடிமைகளுக்கும் இடையே திருமணம் நடப்பதையும் கலிஸ்துஸ் அனுமதித்தார். இவரது காலத்தில் திருஅவையில் அமைதி நிலவியது. இவை அனைத்தும்தான் எதிர்த் திருத்தந்தை ஹிப்போலிட்டசின் கோபத்துக்குக் காரணம். திருத்தந்தை கலிஸ்துஸ் அவர்கள், திருஅவையின் மதிப்பைக் குறைத்ததாகவும், இன்னும், அவரின் இளவயது வாழ்வு பற்றிய பல விபரங்களையும் ஹிப்போலிட்டஸ் எழுதி வைத்துள்ளார். உரோமையில் Carporphorus என்பவர், ஏழைகளையும் கைவிடப்பட்டோரையும் பராமரிப்பதற்கென்று கிறிஸ்தவர்கள் கொடுத்த உதவிப் பணத்தைச் சேகரித்து வந்தார். Carporphorus, தன்னிடம் அடிமையாக வேலை செய்த கலிஸ்துஸிடம், இப்பணத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை ஒப்படைத்தார். ஒருமுறை கலிஸ்துஸ் இப்பணத்தைத் தொலைத்துவிட்டார். இதனால் பயந்து உரோமையிலிருந்து தப்பியோட முயற்சித்தார். இவரை விரட்டிச் சென்றவர்கள் போர்த்துஸ் என்ற இடத்தில் கைது செய்து Carporphorus முன் நிறுத்தினார்கள். கலிஸ்துஸ் பயந்து நடுங்கினார். இதனால் பணம் கொடுத்தவர்கள் எப்படியாவது சம்பாதித்து சிறிதளவு பணத்தைக் கொடுத்துவிடுமாறு சொல்லி அவரை உயிரோடு விட்டுச்சென்றனர். கலிஸ்துஸ், தான் கிறிஸ்தவர் என்று பெருமையோடு சொல்லிக்கொண்டிருந்ததால் இவரைக் கைது செய்து சர்தீனியாவில் சுரங்கங்களில் வேலைசெய்யும் தண்டனை கொடுத்தார்கள். கலிஸ்துஸ், திருத்தந்தை Zephyrinusடம் திருத்தொண்டராக வேலை செய்தவர். உரோமையில் கல்லறைகளைப் பாதுகாக்கும் பொறுப்பை இவரிடம் ஒப்படைத்தார் திருத்தந்தை Zephyrinus. 217ம் ஆண்டில் திருத்தந்தையான கலிஸ்துஸ், ஏறத்தாழ கி.பி. 222ம் ஆண்டுவாக்கில் உரோமையில் நடைபெற்ற ஒரு மோதலில் சன்னல் வழியாகத் தள்ளிவிடப்பட்டதில் உயிர்துறந்தார். புனித திருத்தந்தை முதலாம் கலிஸ்துஸ் கல்லறைப் பணியாளர்களின் பாதுகாவலர். இவரது விழா அக்டோபர் 14.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.