2014-10-13 16:31:15

திருத்தந்தை : காலத்தின் அறிகுறிகளைக் கண்டுகொள்ள வேண்டிய பயணிகள் நாம்


அக்.13,2014. நாம் நம் கொள்கைகளையும், நம் உலகப் பொருள்களையும் பற்றிக்கொண்டு நமக்குள்ளேயே வாழ்ந்துகொண்டிருக்கிறோமா? அல்லது நம் பாதையில் இறைவன் காட்டும் வழிகளுக்குத் திறந்தவர்களாகச் செயல்படுகிறோமா? என்பது குறித்து சிந்திக்க வேண்டுமென அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தான் தங்கியிருக்கும் வத்திக்கான் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இத்திங்கள் காலை திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றிய திருத்தந்தை, காலத்தின் அடையாளங்களைக் கண்டுகொள்ளவும், இறைவனின் குரலுக்கு விசுவாசமாக இருக்கவும் நாம் தயாராக இருக்கிறோமா? என்பது குறித்தும் சிந்திக்க அழைப்புவிடுத்தார்.
எங்களுக்கு அறிகுறியொன்றைக் காட்டும் என சட்டவல்லுனர்கள் இயேசுவிடம் கேட்ட கேள்வியைக் குறித்து தனது மறையுரையில் விவரித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாமும் நம் எண்ணங்களையே உயர்வாகக் கருதி அதிலேயே முடங்கிப்போகாமல், காலத்தின் அறிகுறிகளைக் கண்டு, இயேசுவோடு இணைந்து நடைபோட வேண்டும் என்று கூறினார்.
இயேசு வழங்கிய அறிகுறிகளைப் புரிந்துகொள்ளாமல், காலம் கனிந்துள்ளது என்பதைத் தெரிந்துகொள்ளாமல் புதியதொரு அறிகுறியைக் கேட்ட அக்கால மக்கள் தாங்கள் மறுவுலகம் நோக்கிய பயணத்தில் உள்ளோம் என்பதையும் புரிந்துகொள்ளவில்லை என மேலும் கூறினார் திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.