2014-10-13 16:31:30

திருத்தந்தை : இறைவனின் நன்மைத்தனத்திற்கு எல்லையுமில்லை, பாகுபாடுமில்லை


அக்.13,2014. இறைவனின் நன்மைத்தனத்திற்கு எல்லைகள் என்பது இல்லை, அங்குப் பாகுபாடுகள் பார்க்கப்படுவதில்லை என இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின்போது எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஞாயிறு நற்செய்தி வாசகமான திருமண விருந்திற்கு அழைக்கப்பட்டோர் குறித்த இயேசுவின் உவமை குறித்து மூவேளை செப உரையின்போது எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிலரால் நற்செய்தி ஏற்றுக்கொள்ளப்படாதிருப்பினும், அது பலரால் மனமகிழ்வுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்று கூறினார்.
இயேசுவின் நற்செய்தியை ஏற்றுக்கொண்டவர்கள் அது தங்களுக்கே உண்மையானது என்றோ, தாங்கள் மட்டுமே தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள் என்றோ வீண்பெருமை படுதல் கூடாது என்று கூறிய திருத்தந்தை, அனைத்து எல்லைகளையும் தாண்டி இந்நற்செய்தியை பிறருடன் பகிர வேண்டியது ஒவ்வொருவரின் கடமை என்றும் கூறினார்.
இறைவனின் தாராள உள்ளத்தின் கருவிகளாக இருக்கவேண்டிய நாம் இறையரசை ஒரு குட்டித் திருஅவையாக மாற்றிவிடாமல், அதன் எல்லைகளை விரிவுபடுத்தி வளமாக்க வேண்டுமெனவும் அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இயேசு வழங்கும் இலவசமான அழைப்பை அழைக்கப்பட்டோர் புறக்கணித்தாலும், ஏனையோர் மனமுவந்து ஏற்றுக்கொள்கின்றனர் என்றுரைத்த திருத்தந்தை, இறைவனின் நன்மைத்தனம் எல்லையற்றதாய், பாகுபாடு காணாததாய் உள்ளது என மேலும் உரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.