2014-10-13 16:31:21

குடும்பங்கள் இக்காலச் சவால்களை எதிர்கொள்ள இயேசு மீதான நம்பிக்கை உதவுகிறது


அக்.13,2014. இன்றையக் கலாச்சார மாற்றங்களும், அதன் வழியான, தனித்துவங்களின் அதிகப்படியான முக்கியத்துவமும், தனித்துவ சுதந்திரமும் குடும்பங்களுக்கு ஊறுவிளைவிப்பவைகளாக உள்ளன என கடந்த வார ஆயர்கள் மாமன்றத்தின் கருத்துத் தொகுப்பில் கூறப்பட்டுள்ளது.
குடும்பங்கள் தனிமைப்படுத்தப்படுவது, திருமணங்களுக்கான செலவுச் சுமைகள், சில கலாச்சாரங்களில் பலதாரத் திருமணம், வேறுபட்ட மதநம்பிக்கையாளர்களிடையே திருமணங்கள், திருமணத்திற்கு வெளியே பிறக்கும் குழந்தைகள், மணமின்றி சேர்ந்து வாழ்தல் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டதாக இத்திங்களன்று காலையில் ஆயர் மாமன்றத்தில் வாசிக்கப்பட்ட கருத்துக்கோப்பு கூறியது.
இத்தகைய நிலைகள், வருங்காலம் குறித்த நம்பிக்கையை இழக்கவைக்கின்றன எனக்கூறும் இந்த அறிக்கை, நவீனகாலச் சவால்களை எதிர்கொள்ள இயேசுவின் மீதான நம்பிக்கை உதவுகிறது என உரைக்கிறது.
தாய்க்குரிய பாசத்துடனும் ஆசிரியருக்குரிய தெளிவுடனும் குடும்பம் எனும் நற்செய்தியை எடுத்துரைத்து அதனைப் புதிய நற்செய்தி அறிவித்தலின் அவசரப் பகுதியாக ஏற்க வேண்டியதையும் வலியுறுத்துகிறது இந்த கருத்துத்தொகுப்பு அறிக்கை.
திருமணம் குறித்தவைகளில் சமூகத்தின் கடமையும் இதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
திருமண விலக்குப்பெற்று, அதேவேளை மறுமணம் புரியாமல் வாழ்வோர், நற்கருணை எனும் அருளடையாளம்வழி தங்கள் பலத்தைப் பெறும்வகையில் வழிநடத்தப்படவேண்டும் என்பதும் உரைக்கப்பட்டுள்ளது.
மேலும், 2015ம் ஆண்டு அக்டோபர் 4 முதல் 25 வரை உலக ஆயர்கள் மாமன்றம் நடைபெறும், திருஅவையிலும் நவீன உலகிலும் குடும்பத்தின் அழைப்பும் மறைப்பணியும் என்பது இதன் தலைப்பாக இருக்கும் என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.