2014-10-11 15:59:49

மலாலாவுக்கு நொபெல் அமைதி விருது, பாகிஸ்தான் ஆயர்கள் பெருமிதம்


அக்.11,2014. இவ்வாண்டின் நொபெல் அமைதி விருதைப் பெற்றுள்ள 17 வயது மலாலா யூசுப்சாய், பாகிஸ்தானுக்கு நன்மதிப்பைத் தேடித் தந்துள்ளார் என, பாகிஸ்தானிய பேராயர் ஒருவர் கூறினார்.
இத்தனை மதிப்புமிக்க உலகளாவிய விருதை வளர்இளம் பருவ சிறுமி மலாலா பெற்றிருப்பது நாட்டினர் அனைவருக்கும் பெருமையாக உள்ளது எனத் தெரிவித்த கராச்சி பேராயர் ஜோசப் கூட்ஸ் அவர்கள், இவ்விருதுச் செய்தி வியப்புடன்கூடிய மகிழ்வைத் தந்தது என்று கூறினார்.
அனைத்துலக சமுதாயம் பாகிஸ்தானைப் பயங்கரவாதத்தோடு இணைத்துப் பேசுகின்றது, அந்நாட்டுக்கு மற்றொரு பக்கமும் உள்ளது என்பதை இவ்விருது காட்டியுள்ளது என்றும் பேராயர் கூட்ஸ் கூறினார்.
மேலும், நொபெல் அமைதி விருது பற்றிப் பேசிய மலாலா, சிறுமிகள் தங்கள் உரிமைகளுக்காகத் துணிந்து குரல் கொடுக்க வேண்டுமென்றும், பேச்சுரிமை இழந்த, குரலற்ற அனைத்துச் சிறாரின் விருதாக இது உள்ளது என்றும் கூறினார்.
1901ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட நொபெல் அமைதி விருதின் வரலாற்றில் மிக இள வயதில் இதனைப் பெற்றுள்ளவர் என்ற பெருமைக்குரியவர் மலாலா.
மேலும், இந்தியாவின் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சிறார் உரிமை ஆர்வலர் அறுபது வயது கைலாய்ஷ் சத்யார்த்தி அவர்களும் இவ்விருதை மலாலாவோடு பகிர்ந்து கொள்கிறார்.

ஆதாரம் : CNA







All the contents on this site are copyrighted ©.