2014-10-11 15:59:16

உலகில் கடும் வறுமையை ஒழிப்பதில் திருப்பீடம் அக்கறை


அக்.11,2014. ஐ.நா.வின் மில்லென்ய இலக்குகளை எட்டும் திட்டங்களின்கீழ், உலகளாவிய ஏழ்மை, குழந்தை இறப்பு, பிரசவகால இறப்பு ஆகியவை குறைந்திருந்தாலும், இந்த இலக்குகளை எட்டுவதற்கு மேலும் நிறைய முயற்சிகள் எடுக்கப்பட வேண்டுமென்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் ஐ.நா.வில் கூறினார்.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து உழைத்தால் மட்டுமே, 2015ம் ஆண்டுக்குள் எட்டப்பட வேண்டுமென்ற ஐ.நா.வின் மில்லென்ய வளர்ச்சித்திட்ட இலக்குகளை அடைய முடியும் என்று கூறினார், ஐ.நா.வுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் Bernardito Auza.
நியுயார்க் ஐ.நா. தலைமையகத்தில், பொருளாதாரமும் நிதியும் பற்றி நடந்த ஐ.நா. கூட்டத்தில் உரையாற்றிய பேராயர் Auza அவர்கள், ஏழ்மை ஒழிப்பில் உலக அளவில் முன்னேற்றம் காணப்பட்டாலும், நூறு கோடிக்கு மேற்பட்ட மக்கள் அதாவது உலக மக்கள் தொகையில் 15 விழுக்காட்டினர் இன்னும் ஒரு நாளைக்கு 1.25 டாலருக்குக் குறைவான நிலையிலே வாழ்கின்றனர் என்று சுட்டிக்காட்டினார்.
ஐ.நா.வின் மில்லென்ய வளர்ச்சித்திட்ட இலக்குகளில், உலகில் கடும் வறுமையை ஒழிப்பதிலே திருப்பீடம் அதிக அக்கறை கொண்டுள்ளது என்பதையும் எடுத்துச் சொன்னார் பேராயர் Auza.
பசி ஒழிப்பு, கல்வி வாய்ப்பு, சமத்துவமின்மையை ஒழித்தல், தாய்-சேய் இறப்பைத் தடுத்தல் போன்ற விவகாரங்கள், 2000மாம் ஆண்டின் ஐ.நா.வின் வளர்ச்சித்திட்ட இலக்குகளில் உள்ளன. இதில் 189 உறுப்பு நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. 2007ல் 45 நாடுகள் மீண்டும் அதை உறுதிப்படுத்தின.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.