2014-10-10 16:12:11

ஆயர்கள் மாமன்றத்தின் ஐந்தாவது நாள் காலை கருத்துப்பரிமாற்றங்கள்


அக்.10,2014. குடும்பம் குறித்த உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றத்தின் ஐந்தாவது நாளாகிய இவ்வெள்ளிக்கிழமை காலை பொது அமர்வு, 9 மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முன்னிலையில் தொடங்கியது.
185 மாமன்றத் தந்தையர் பங்குபெற்ற இந்தப் பொது அமர்வில், குடும்பத்திற்கான மேய்ப்புப்பணி, உயிரிய அறநெறிகள், மனிதச்சுற்றுச்சூழல் போன்ற தலைப்புகளில் 15 பேர் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர்.
மத்திய கிழக்குப் பகுதியில், குறிப்பாக, ஈராக்கின் குடும்பங்களில் எண்ணற்ற போர்கள் இளையோர் மற்றும் முதியோரின் வாழ்வைப் பாதித்துள்ளன, மத்திய கிழக்கில் கிறிஸ்தவக் குடும்பங்களின் ஒன்றிப்பு நலிவடைந்துள்ளன, இவர்களுக்குக் திருஅவை பாதுகாப்பாக உள்ளது என்பது இப்பொது அமர்வில் கூறப்பட்டது.
குடும்பங்களில் அமைதியையும் ஒப்புரவையும் ஏற்படுத்துவதில் திருமணமான தம்பதியரைத் திருஅவை அதிகம் சார்ந்துள்ளது என்றும், திருஅவைக்கும் நாட்டுக்கும் இடையேயான உரையாடலில் பொதுநிலை விசுவாசிகள் பெரும்பங்கு வகிக்கின்றனர் என்றும் இப்பொது அமர்வில் கூறப்பட்டது.
இளையோருக்கு அதிகமான உரைகள் தேவையில்லை, ஆனால் குடும்பங்களே அவர்களுக்கு வழிகாட்ட முடியும், நம்பத்தகுந்த சாட்சிய வாழ்வு வாழ்வோர் இளையோருக்கு அவசியம் என்பதும் எடுத்துரைக்கப்பட்டது.
குடும்ப வன்முறை, குறிப்பாக, பெண்களுக்கு எதிரான வன்முறையால் இளையோர் அடிக்கடி பாதிப்புக்கு உள்ளாகின்றனர் எனவும் இவ்வெள்ளி காலை பொது அமர்வில் கருத்துப்பரிமாற்றங்கள் இடம்பெற்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.