2014-10-10 16:13:10

அக்.11, அனைத்துலக சிறுமிகள் தினம்


அக்.10,2014. வன்முறைகள் இல்லாத, தங்களின் முழு ஆற்றலையும் அடையக்கூடிய ஓர் உலகை சிறுமிகளுக்கு அமைத்துக் கொடுப்பதற்கு உலகினர் எல்லாரும் தங்களை அர்ப்பணிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார் ஐ.நா. பெண்கள் அமைப்பின் இயக்குனர் Phumzile Mlambo-Ngcuka.
அக்டோபர் 11, இச்சனிக்கிழமையன்று கடைப்பிடிக்கப்படும் அனைத்துலக சிறுமிகள் தினத்தை முன்னிட்டு செய்தி வெளியிட்டுள்ள Mlambo-Ngcuka, சிறுமிகளுக்கு எதிராக இடம்பெறும் எல்லாவிதமான வன்முறைகளும், பாலியல் சமத்துவமின்மையில் ஆழமாக வேரூன்றப்பட்ட கடும் மனித உரிமைகள் மீறலாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு நாளும் 39 ஆயிரம் சிறுமிகள், தங்களின் 18 வயதை எட்டும் முன்னர் திருமணம் செய்து வைக்கப்படுகின்றனர் என்றும், இந்நிலை தொடர்ந்தால் 2020ம் ஆண்டுக்குள் 14 கோடி சிறார் மணப்பெண்கள் இருப்பார்கள் என்றும் அச்செய்தி கூறுகிறது.
இளமையில் திருமணம் செய்து வைக்கப்படும் சிறுமிகள், மற்ற பெண்களைவிட, தங்களின் கணவர்களிடமிருந்து அதிகமான பாலியல் கொடுமையையும், வன்முறையையும் எதிர்நோக்குகின்றனர் என்றும் Mlambo-Ngcuka கூறியுள்ளார்.
குறைந்தது 13 கோடியே 30 இலட்சம் சிறுமிகளும் பெண்களும் தங்களின் பெண் உறுப்புகள் சேதமாக்கப்பட்டதை அனுபவித்துள்ளனர்.
ஐ.நா.வால் அறிவிக்கப்பட்ட அனைத்துலக சிறுமிகள் தினம் 2012ம் ஆண்டு அக்.11ம் தேதி முதன் முதலில் கடைப்பிடிக்கப்பட்டது.

ஆதாரம் : UN








All the contents on this site are copyrighted ©.