2014-10-09 16:42:35

மாமன்றத்தின் ஒன்பதாவது பொது அமர்வு


அக்.09,2014. குடும்பம் குறித்த உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றத்தின் ஒன்பதாவது பொது அமர்வு, இவ்வியாழன் காலை 9 மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முன்னிலையில், இம்மாமன்றத்தின் மூன்று தலைவர் பிரதிநிதிகளில் ஒருவரான பாரிஸ் பேராயர் கர்தினால் André Vingt-Trois அவர்கள் தலைமையில் தொடங்கியது.
இப்பொது அமர்வைத் தொடங்கி வைத்துப் பேசிய கர்தினால் Vingt-Trois அவர்கள், பிரேசில் நாட்டின் Arturo, Hermelinda As Zamberline தம்பதியரை அவைக்கு அறிமுகம் செய்து வைத்து, Instrumentum laboris என்ற மாமன்றத் தொகுப்பு வரைவின் 3வது பிரிவிலுள்ள தலைப்புகள் பற்றி கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெறும் என்று அறிவித்தார்.
இயற்கைக் குடும்பக் கட்டுப்பாடு, திருமணத்தில் பொறுப்புள்ள பாலியல் வாழ்வு, இந்தப் பாலியல் வாழ்வில் இளையோரும், தம்பதியரும் எதிர்நோக்கும் பிரச்சனைகள் போன்றவைகளை அவைக்கு முன்வைத்த பிரேசில் தம்பதியர், கத்தோலிக்க அறநெறிக்கோட்பாட்டைப் பாதிக்காத வகையில் இவை குறித்த விளக்கங்கள் தரப்படுமாறு கேட்டுக்கொண்டனர்.
Arturo, Hermelinda தம்பதியர், 1994ம் ஆண்டிலிருந்து அனைத்துலக அன்னைமரியா இயக்கத்தில் இருந்து தற்போது அந்த இயக்கத்தின் பிரேசில் கிளைக்குப் பொறுப்பாளர்களாக உள்ளனர். இவ்வியக்கத்தின் தனிவரம் திருமண ஆன்மீகமாகும். இத்தம்பதியர் 41 ஆண்டுகள் திருமண வாழ்வில் இணைந்து மூன்று பிள்ளைகளுக்குப் பெற்றோராய் இருப்பவர்கள். அனைத்துலக அன்னைமரியா இயக்கம் 1938ல் ஆரம்பிக்கப்பட்டு 70 நாடுகளில் இயங்கி வருகின்றது. இதிலுள்ள 1,37,200 உறுப்பினர்களில் 45,500 பேர் பிரேசிலில் உள்ளனர்.
மேலும், இவ்வியாழன் காலை 9 மணிக்குத் தொடங்கிய, குடும்பம் குறித்த உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றத்தின் பொது அமர்வின் ஆரம்ப செபத்தை மொசாம்பிக் நாட்டின் Xai-Xai ஆயர் Lúcio Andrice Muandula அவர்கள் வழிநடத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.