2014-10-09 15:56:52

புனிதரும் மனிதரே : மாற்றம் எல்லா நிலைகளிலும் இடம்பெறட்டும்(St.John Leonardi)


“மாற்றம் என்பது மேல்மட்டத்திலிருந்தும், கீழ்மட்டத்திலிருந்தும் கண்டிப்பாகத் தொடங்க வேண்டும். அதற்குமுன்பாக, மாற்றம் எங்கு இடம்பெற வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். உலகில் அறநெறி சார்ந்த மறுமலர்ச்சியைக் கொண்டுவரும்போது இறைவனின் அருளை இறைஞ்ச வேண்டும். ஏனெனில் அவரே அனைத்து நன்மைத்தனத்தின் ஊற்று. பிறரை மாற்றவதற்கு நினைப்பவர்கள், முதலில் தாங்களே ஒவ்வொரு நற்பண்புகளின் கண்ணாடியாகத் துலங்க வேண்டும். இம்மாதிரியான உயர்நெறியில் வாழ்வதன்மூலம் எந்த ஒரு மறுமலர்ச்சியையும் கொண்டுவர இயலும்”. 17ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மறுமலர்ச்சி பற்றி, திருத்தந்தை ஐந்தாம் பவுல் அவர்களுக்கு, இப்படி மடல் எழுதியவர் ஜான் லியோனார்தி. மருந்துக்கடையில் வேலை செய்யும் கல்விக்காக, இவர் தனது 17வது வயதில் பெயரைப் பதிவுசெய்து, ஆர்வமுடன் பத்து ஆண்டுகள் படித்து அதற்குரிய சான்றிதழ் பெற்றார். தென் இத்தாலியின் லூக்கா நகரில் மருந்துக்கடையில் வேலைசெய்த இவருக்கு எல்லா வசதிகளும் குறைவின்றி இருந்தன. ஆனால் அவரது உள்ளம் வாழ்விற்கு அர்த்தம் தேடியது. இதனால் லியோனார்தி இறையியல் படித்து 1572ல் குருவாக அருள்பொழிவு செய்யப்பட்டார். பின்னர், சமூகத்தில் கடைநிலையில் உள்ளவர்கள் மற்றும் புறக்கணிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய நினைத்து சில பொதுநிலை விசுவாசிகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுடன் சேர்ந்து மருத்துவமனைகளுக்குச் சென்று நோயாளிகளுக்குப் பணி செய்தார். சிறைகளுக்கும் சென்று உதவினார் இவர். Trent பொதுச்சங்கம் பரிந்துரைத்த சீர்திருத்தங்களால் கவரப்பட்டு பொதுநிலை குருக்கள் சபை ஒன்றைத் தொடங்குவதற்கு விரும்பினார். ஆனால் அவருக்கு பலத்த எதிர்ப்புகள் எழுந்தன. எனினும் 1583ல் அச்சபையைத் தொடங்கினார். அதுவே இறைவனின் அன்னை சபையாகும். இவரோடு சேர்ந்து பணிசெய்தவர்கள் எல்லாரும் குருவானார்கள். இச்சபை லூக்கா ஆயர், திருத்தந்தை 13ம் கிரகரி ஆகியோரின் அங்கீகாரம் பெற்றது. திருப்பீட நற்செய்தி அறிவிப்புப் பேராயம் தொடங்கப்படுவதற்கும் இவர் உதவினார். 1541ம் ஆண்டு Diecimo என்ற ஊரில் பிறந்த அருள்பணி ஜான் லியோனார்தி, 1938ல் புனிதராக உயர்த்தப்பட்டார். உரோமையில் கொள்ளை நோய் பரவியபோது அவர்களுக்கு உதவி செய்த அருள்பணி ஜான் லியோனார்தி அந்நோயால் தாக்கப்பட்டு 1609ம் ஆண்டு அக்டோபர் 9ம் தேதி காலமானார். புனித ஜான் லியோனார்தி விழா அக்டோபர் 9. மருந்துக்கடையில் வேலை செய்பவர்களுக்குப் பாதுகாவலராக, 2006ம் ஆண்டில் இப்புனிதர் அறிவிக்கப்பட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.