2014-10-08 16:39:07

நாடுகளின் சட்ட அமைப்பில் குடியேற்றதாரர் குறித்த சீர்திருத்தம் அவசியம்


அக்.08,2014. நாடுகளின் சட்ட அமைப்பில் குடியேற்றதாரர் குறித்த சீர்திருத்தம் இடம்பெறவேண்டியது உடனடியாகத் தேவைப்படுகின்றது என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
“குடியேற்றமும் குடும்பங்களும்” என்ற தலைப்பில், அனைத்துலக குடியேற்றதாரர் நிறுவனத்தின் குடியேற்றம் குறித்த அனைத்துலக உரையாடல் பிரிவு நடத்திய கூட்டத்தில் இப்புதனன்று உரையாற்றிய பேராயர் சில்வானோ தொமாசி அவர்கள் இவ்வாறு கூறினார்.
அனைத்துக் குழந்தைகளுக்கும் பெற்றோர் அவசியம், பெற்றோரும் தங்கள் குழந்தைகளைப் பாதுகாத்து வளர்க்க வேண்டிய தார்மீகப் பொறுப்பைக் கொண்டுள்ளனர், எனினும், குடியேற்றதாரப் பெற்றோர் இந்தத் தங்கள் கடமையைச் செய்வதற்குத் தடைகளை எதிர்நோக்குகின்றனர் என்றும் கூறினார் பேராயர் தொமாசி.
குடியேற்றதாரர், தாங்கள் வாழும் சமூகத்துக்குப் பயனாக உள்ளனர், ஆனால் தங்கள் பிள்ளைகள் மற்றும் உறவுகளின் அன்பைப் பெறுவதில் துன்பங்களைச் சந்திக்கின்றனர் என்பதையும் சுட்டிக்காட்டினார் பேராயர் தொமாசி.
பேராயர் சில்வானோ தொமாசி அவர்கள், ஜெனீவாவிலுள்ள ஐ.நா. அலுவலகங்களுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளராவார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.