2014-10-08 16:39:00

சனநாயகத்துக்கு ஆதரவாக மாணவர்களுடன் ஹாங்காக் கர்தினால் சென்


அக்.08,2014. ஹாங்காக்கில் சனநாயகத்துக்காக கடந்த பத்து நாள்களுக்கு மேலாக வீதிகளில் இறங்கிப் போராடிவரும் மாணவர்களுக்கு ஆதரவாக, அம்மாணவர்களுடன் இரவைச் செலவழித்தார் ஹாங்காக் கர்தினால் ஜோசப் சென்.
சீனாவுக்கு எதிராக ஹாங்காக்கின் முக்கிய தெருக்களில் இரவும் பகலும் போராடிவரும் மாணவர்களுடன் ஏற்கனவே மூன்று இரவுகள் வீதியில் உறங்கியுள்ளதாகவும், போராட்டதாரர்கள் கலைக்கப்படும் அல்லது கைதுசெய்யப்படும் வரை, இனிமேல் மாணவர்களுடன் ஒவ்வோர் இரவும் உறங்கவிருப்பதாகத் தெரிவித்தார் கர்தினால் சென்.
அரசுடனான பேச்சுவார்த்தைகள் இதுவரை தோல்வியிலேயே முடிந்துள்ளன என்றும், மாணவர்களைப் பிரிப்பதற்கு அரசு முயற்சிக்கின்றது என்றும், அரசு விளையாடுகின்றது என்றும் ஆசியச் செய்தி நிறுவனத்திடம் கூறினார் கர்தினால் சென்.
ஹாங்காங்கில், ஆட்சித் தலைவருக்கான தேர்தலில் சனநாயகச் சீர்திருத்தத்தை வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
பிரிட்டனின் காலனியாக இருந்து வந்த ஹாங்காங், 1997ம் ஆண்டு சீனாவிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. அதுமுதல், "ஒரு நாடு, இரு அரசமைப்பு' என்ற கொள்கையின் அடிப்படையில் ஹாங்காங்கை சீனா நிர்வகித்து வருகிறது. இந்நிலையில், ஹாங்காங் ஆட்சித் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் 2017ம் ஆண்டு நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிடுபவர்களை சீன அரசு நியமிக்கும் குழுதான் தேர்வு செய்யும் என அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்களும், சனநாயக ஆதரவு அமைப்பினரும் போராடி வருகின்றனர்.

ஆதாரம் : AsiaNews







All the contents on this site are copyrighted ©.