2014-10-08 16:38:46

குடும்பங்களைக் கட்டியெழுப்புவதற்குத் தம்பதியரின் தாராள அர்ப்பணம் தேவை


அக்.08,2014. ஒருவர் முகமூடியின்றி, தான் தானாக வாழ்வதற்கும், ஒருவர் ஒருவருக்கு ஊக்கமூட்டுவதன்மூலம் தன்னம்பிக்கையில் வளர்வதற்கும், தனிமைத் துன்பத்தில் வாடாதிருப்பதற்குவும், பகிர்வில் பழகி முழு மனிதராய் வாழ்வதற்கும் குடும்பம் ஒரு தளமாக அமைந்துள்ளது என்று, உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றத்தில் கூறினார் ஆப்ரிக்கப் பிரதிநிதி ஒருவர்.
இப்புதன் காலை பொது அமர்வில் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட ஆப்ரிக்காவின் ஐவரி கோஸ்ட் நாட்டின் Jeannette Touré அவர்கள், குடும்பங்களைக் கட்டியெழுப்புவதற்குத் தம்பதியரின் தாராள அர்ப்பணம் தேவை என்றும், சமூக வாழ்வை இனிமையாக வாழவும், வேறுபாடுகளைப் புரிந்துகொள்ளவும் குடும்பம் தளமாக உள்ளது என்றும் கூறினார்.
52 ஆண்டுகளுக்கு மேலாக முஸ்லிம் கணவரோடு தான் நடத்திவரும் குடும்ப வாழ்வில், சகிப்புத்தன்மையுடன் ஒருவர் ஒருவரின் மத நம்பிக்கையை மதித்து வாழ்வதாகவும் Jeannette விளக்கினார்.
கணவரின் அனுமதியுடன் தங்களின் 5 பிள்ளைகளையும் கத்தோலிக்க விசுவாசத்தில் வளர்த்து வருவதாகவும் கூறிய ஜெனெட், ஓரினப் பாலின சேர்க்கை, குடும்ப முறிவுகள், திருமணமாகமலே பிள்ளைகளுடன் வாழும் பெற்றோர், திருமணமுறிவுகள் உட்பட பல விவகாரங்கள் பற்றியும் விளக்கினார்.
Jeannette Touré, ஐவரி கோஸ்ட் நாட்டின் தேசிய கத்தோலிக்கப் பெண்கள் கழகத்தின் தலைவராவார்.
குடும்பம் குறித்த உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றத்தின் ஐந்தாவது பொது அமர்வை இப்புதன் காலையில் தொடங்கிவைத்துப் பேசிய, கர்தினால் Raymundo Damasceno Assis அவர்கள், இம்மாமன்றத்தின் விவாதத்திற்கென தயாரிக்கப்பட்ட Instrumentum laboris என்ற தொகுப்பு வரைவின் 2வது பிரிவிலுள்ள தலைப்புகள் பற்றி இப்பொது அமர்வின் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெறும் என்று அறிவித்தார். ஐந்தாவது பொது அமர்வில் 182 மாமன்றத் தந்தையர் கலந்துகொண்டனர்.
இம்மாமன்றத்தின் மூன்று தலைவர் பிரதிநிதிகளில் ஒருவரான பிரேசில் நாட்டின் Aparecida பேராயர் கர்தினால் Assis அவர்கள், விசுவாசப் பிரச்சனையும் குடும்ப வாழ்வும், குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகள், வெளியிலிருந்து குடும்பங்களுக்கு வரும் அழுத்தங்கள் போன்ற தலைப்புகள் இடம்பெறும் என்று அறிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.