2014-10-08 15:52:46

அக்.09,2014. புனிதரும் மனிதரே : இத்தாலியைப் பாதுகாத்த திருத்தந்தை (Pope Leo I)


திருத்தந்தை புனித முதலாம் லியோ அவர்கள், கத்தோலிக்கத் திருஅவையின் 45வது திருத்தந்தையாக கி.பி. 440 செப்டம்பர் 29ம் நாளிலிருந்து 461, நவம்பர் 10ம் நாள் வரை தலைமையேற்று நடத்தினார். திருஅவை வரலாற்றிலேயே முதன்முதலாக "பெரிய" ("மகா") என்னும் அடைமொழி பெற்ற முதல் திருத்தந்தை இவரே.
முதலாம் லியோ ஏறத்தாழ கி.பி. 400ம் ஆண்டில் இத்தாலிய உயர்குடியைச் சார்ந்த பெற்றோருக்குப் பிறந்தார். "திருத்தந்தையர் நூல்" என்னும் ஏடு அவர் பிறந்த இடமாக இத்தாலியின் தஸ்கனி பகுதியைக் குறிக்கிறது.
திருத்தந்தை லியோ அவர்களின் பணிக்காலம் கத்தோலிக்கத் திருஅவையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. திருத்தந்தை லியோ திருஅவையின் முக்கிய பொதுச்சங்கங்களுள் ஒன்றாகிய 451ம் ஆண்டின் கால்செதோன் பொதுச்சங்கத்தில் நிகழ்ந்த விவாதங்களுக்கு அடிப்படையான கருத்துக்கோப்புகளை வழங்கினார். இயேசு கிறிஸ்துவில் இரு இயல்புகள் உள்ளன: ஒன்று இறையியல்பு, மற்றொன்று மனித இயல்பு. இவ்விரு இயல்புகளும் ஒரே தெய்வீக ஆளில் குழப்பமோ பிளவோ இன்றி இணைந்துள்ளன என்ற உண்மை இவரால் வலியுறுத்தப்பட்டது.
452ம் ஆண்டில் ஹுண் இனத்தைச் சார்ந்த படைத்தலைவரான அட்டிலா என்பவர், வட இத்தாலியின் மீது படையெடுத்து வந்து அதன் பெரும்பகுதியை அழிவுக்கு உட்படுத்தினார். பின்னர் உரோமையை வந்தடையும் வண்ணம் புறப்பட்டு, வட இத்தாலியின் மாந்துவா நகரை அணுகியபோது, திருத்தந்தை லியோ நேரடியாகச் சென்று அட்டிலாவை சந்தித்துப் பேசினார். அட்டிலாவும் அவருடைய படைகளும் படையெடுப்பைக் கைவிட்டு திரும்பிச் சென்றனர். இத்தாலியைப் பாதுகாத்த இந்த நிகழ்வு, திருத்தந்தை முதலாம் லியோ அவர்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளுள் மிகவும் புகழ்பெற்றதாகக் கருதப்படுகிறது
மூன்று ஆண்டுகளுக்குப்பின், 455ல் வாண்டல் இனத்தவர் உரோமை நகரைத் தாக்கிக் கொள்ளையடிக்க வந்த போது, வாண்டல் படைத்தலைவரான சென்செரிக்கையும் படைகளையும் உரோமை நகரின் தடுப்புச் சுவர்களுக்கு வெளியே சந்தித்த திருத்தந்தை லியோ அவர்களால், அவர்களைத் தடுத்து நிறுத்த முடியவில்லையாயினும், உயிர்ச் சேதம் மற்றும் தீ வைப்பு தடுக்கப்பட்டது ஒரு சாதனை என்பர்.
திருத்தந்தை லியோ 461ம் ஆண்டு, நவம்பர் 10ம் நாள் இறந்தார். அவருடைய உடல் உரோமையில் புனித பேதுரு பசிலிக்கா பேராலய உள்முற்றத்தில் அடக்கம் செய்யப்பட்டது. 688ல் பசிலிக்காவுக்கு உள்ளே அடக்கப்பட்டு, கல்லறைமீது சிறப்பான விதத்தில் ஒரு பீடமும் நிறுவப்பட்டது.
1754ல் திருத்தந்தை லியோ அவர்களுக்கு திருஅவையின் மறைவல்லுநர் என்னும் பட்டம் வழங்கப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.