2014-10-07 16:16:46

திருத்தந்தை : நம் வரலாற்றை கடவுள் முன்னிலையில் நினைத்துப் பார்ப்போம்


அக்.07,2014. நாம் கடவுளுக்கு மகிமை செலுத்த விரும்பினால் அவர் நமக்குச் செய்த அனைத்தையும் நினைத்துப் பார்க்க வேண்டும், அவர் நம்மீது வைத்துள்ள அன்பை நினைத்துப் பார்க்கும்போது, நமக்கு நாமே நேர்மையாய் இருந்து நம் பாவங்களையும் நினைத்துப் பார்க்க வேண்டும் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வத்திக்கான் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இச்செவ்வாய் காலை திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றிய திருத்தந்தை, கடவுள் தம் மக்களைத் தேர்ந்தெடுத்து அவர்களின் வாழ்வு முழுவதும் பாலைவனப் பயணத்தில் அவர்களுடனே இருக்கிறார் என்று கூறினார்.
புனித பவுலடிகளார் தனது பாவங்களை மறைக்காமல் கடந்தகாலத் தனது வாழ்வை நினைவுகூர்வது பற்றிச் சொல்லும் திருப்பலி முதல் வாசகம் பற்றிய சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை, பவுலடிகளார் தனது உண்மையான நிலையைத் தெளிவாக நினைவுகூர்ந்தது அவரை உயர்த்தியது என்றும் கூறினார்.
நம் வாழ்வை நினைத்துப் பார்ப்பது, பொதுவான பழக்கமாக அதிகமாகத் தெரியவில்லை, நாம் கடந்த காலத்தை மறந்து வாழ்ந்துகொண்டிருக்கிறோம், நம் ஒவ்வொருவருக்கும் ஒரு வரலாறு இருக்கின்றது, நம் வரலாற்றோடு செபிப்பது நல்ல செயல் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நாம் கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள், நாம் பாவிகள், கடவுள் நமக்கு அளித்த நம்பிக்கையாகிய வாக்குறுதிகள் ஒருபோதும் நம்மை ஏமாற்றாது என்று நினைப்பதே உண்மையான செபம் என்றும் திருத்தந்தை கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.