2014-10-07 16:17:13

ஜப்பானிய அறிவியலாளருக்கு இயற்பியல் நொபெல் விருது


அக்.07,2014. 2014ம் ஆண்டின் இயற்பியலுக்கான நொபெல் விருது 1990களின் ஆரம்பத்தில் நீல நிற எல் ஈ டி (Light Emitting Diode) விளக்கை கண்டுபிடித்ததற்காக ஜப்பானிய அறிவியலாளர்களான பேராசியர்கள் இசாமு அகாசகி, ஹிரோஷி அமானோ, ஷூஜி நக்கமுரா ஆகியோருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்வீடனில் செய்தியாளர் கூட்டத்தில் இதனை அறிவித்த நொபெல் தேர்வுக் குழுவினர் லைட் எமிட்டிங் டையோட் எல் ஈ டியின் பயன்பாட்டை வலியுறுத்தினர்.
மிகக் குறைவான மின் சக்தியிலேயே இயங்கக்கூடிய, சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையிலான ஒளி ஆதாரமாக எல்ஈடி விளக்குகள் அமைவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒளி உமிழும் இண்கேண்டஸெண்ட் விளக்குகள் 20ஆம் நூற்றாண்டில் உலகின் ஒளி ஆதாரமாக விளங்கியது என்றால் 21ஆம் நூற்றாண்டின் உலகின் ஒளி ஆதாரமாக விளங்கப்போவது எல் ஈ டி விளக்குகள்தான் என நொபெல் தேர்வுக் குழுவின் அறிக்கை கூறுகிறது.
1901ஆம் ஆண்டிலிருந்து இயற்பியலுக்காக நொபெல் விருது வாங்கியுள்ள 196 பேர்களுடைய பட்டியலில் பேராசியர்கள் இசாமு அகாசகி, ஹிரோஷி அமானோ, ஷூஜி நக்கமுரா ஆகியோரது பெயர்களும் தற்போது சேர்ந்துள்ளன.
இசாமுவும் ஹிரோஷியும் தொடர்ந்து நகோயா பல்கலைக்கழகத்திலேயே பணியாற்றுகிறார்கள். ஷூஜி அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் தற்போது பணியாற்றிவருகிறார்.


ஆதாரம் : BBC







All the contents on this site are copyrighted ©.