2014-10-07 12:00:00

குடும்ப வாழ்வு ஒழுங்கில்லா நிலையில் உள்ளது, மாமன்றத்தில் ஆஸ்திரேலியத் தம்பதியர்


அக்.07,2014. இத்திங்கள் மாலை தொடங்கிய குடும்பம் குறித்த உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றத்தின் இரண்டாவது பொது அமர்வில் குடும்பங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து ஆஸ்திரேலியத் தம்பதியர் தங்களின் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர்.
இப்பொது அமர்வைத் தலைமை தாங்கி நடத்திய பாரிஸ் பேராயர் கர்தினால் Vingt-Trois அவர்கள், “திருமணம் மற்றும் குடும்பத்திற்கான இறைவனின் திட்டம்”, “திருமறை நூல்கள் மற்றும் திருஅவை ஏடுகளிலிருந்து திருமணம் மற்றும் குடும்பம் குறித்த போதனைகளை ஏற்பதும், அவை பற்றிய அறிவும்” என்ற தலைப்புகளில் இம்மாலை அமர்வு நடைபெறும் என, சிறிய முன்னுரை வழங்கினார்.
திருமணம் மற்றும் குடும்பம் பற்றிய திருஅவைப் போதனைகளை அறிந்திருந்தாலும், அவைகளை ஏற்பதற்குப் பல கிறிஸ்தவர்களுக்குக் கடினமாக உள்ளது, இதனால் மேய்ப்புப்பணியாளர்கள், குடும்பம் சார்ந்த விசுவாச உண்மைகளை எடுத்துச்சொல்ல வேண்டும் என்றும் கூறினார் கர்தினால் Vingt-Trois.
பின்னர் ஆஸ்திரேலியத் தம்பதியர் ரொமானோ மற்றும் மாவிஸ் பிரோலாவை அவைக்குப் பேச அழைத்தார் கர்தினால் Vingt-Trois. ஆஸ்திரேலிய கத்தோலிக்கத் திருமணம் மற்றும் குடும்ப அவையின் இயக்குனர்களாகிய இவர்களுக்கு நான்கு குழந்தைகளும் எட்டுப் பேரப் பிள்ளைகளும் உள்ளனர். 55 வருடமாக இவர்கள் திருமண வாழ்வில் இணைந்துள்ளனர்.
இப்பொது அமர்வில் தங்களின் கருத்துக்களைத் தெரிவித்த ஆஸ்திரேலியத் தம்பதியரான ரொமானோ மற்றும் மாவிஸ் பிரோலா, குடும்ப வாழ்வு ஒழுங்கில்லா நிலையில் உள்ளது, குடும்பங்களின் குடும்பமான பங்குத்தள வாழ்வும் அவ்வாறே இருக்கின்றது என்று கூறினர்.
குடும்ப வாழ்வில் பிரிந்து பதட்டநிலைகளை அனுபவிக்கும் பல கத்தோலிக்கத் தம்பதியர், திருஅவைப் போதனைகளைக் கடைப்பிடிப்பதற்கு எடுக்கும் முயற்சிகளில் கஷ்டப்படுகின்றனர், கணவரைப் பிரிந்த தாய்மார் தங்கள் பிள்ளைகளை ஆலயத்துக்கு அழைத்துச்செல்லும்போது வரவேற்கப்படாத சூழலைச் சந்திக்கின்றனர் என்றும் அத்தம்பதியர் கூறினர்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முன்னிலையில் நடந்த இந்தப் பொது அமர்வில், 180 மாமன்றத் தந்தையர்கள் பங்குகொண்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.