2014-10-06 15:21:11

புனிதரும் மனிதரே : செபமாலை அன்னை விழா வரலாறு(The History of the Rosary)


அக்கால உரோமைப் பேரரசின் கிழக்குப் பகுதியாகிய பைசான்டைன் பேரரசை, 1453ம் ஆண்டில் துருக்கிய ஒட்டமான் பேரரசு ஆக்ரமித்திருந்தது. இதனால் பைசான்டைன் கிறிஸ்தவப் பேரரசின் பெரும்பகுதி இசுலாமிய சட்டத்தின்கீழ் வந்தது. அடுத்த நூறு ஆண்டுகளுக்கு துருக்கியர்கள் தங்களின் பேரரசை மேற்கு நேக்கி விரிவுபடுத்தி வந்தனர். மத்தியதரைக் கடல் பகுதியில் தங்களின் கடற்படைத் தளத்தை அமைத்தனர். உரோமையைக் கைப்பற்றும் நோக்கத்தில், 1565ம் ஆண்டில் துருக்கியர்கள் மால்ட்டாலைத் தாக்கினர். மால்ட்டாவைவிட்டு அவர்கள் விரட்டப்பட்டாலும் 1570ல் சைப்ரசைக் கைப்பற்றினர். எனவே கிறிஸ்தவக் கலாச்சாரத்தைப் பாதுகாப்பதற்காக, ஜெனோவா, இஸ்பெயின், பாப்பிறை அரசுகள் ஆகிய மூன்றும், 1571ல், துருக்கிய ஆக்ரமிப்புக்கு எதிராக கூட்டணி அமைத்தன. 1571, அக்டோபர் 7ம் தேதியன்று இக்கூட்டணியின் இருநூறுக்கும் அதிகமான போர்க் கப்பல் வீரர்கள், கிரீஸ் நாட்டின் மேற்குக் கரையில் Lepanto எனுமிடத்தில் துருக்கியரை எதிர்க்கச் சென்றனர். அச்சமயத்தில் இப்போருக்குத் தயாரிப்பாக இவர்கள் அன்னைமரியாவை நோக்கிச் செபமாலை செபித்தனர். அதேநேரம் திருத்தந்தை 5ம் பத்திநாதரின் வேண்டுகோளின்பேரில் ஐரோப்பா முழுவதும் ஆலயங்களில் அன்னைமரியிடம் மக்கள் செபித்தனர். இப்போரில் துருக்கியர் தோல்வியடைந்தனர். எனவே இசுலாமியரிடமிருந்து கிறிஸ்தவ ஐரோப்பா காப்பாற்றப்பட்டது. இதனைச் சிறப்பிக்கும் விதமாக, 1572ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதியன்று, அன்னைமரியாவை, வெற்றியின் அன்னையாகக் கொண்டாடினர். திருத்தந்தையும், செபமாலையை, திருஅவையின் செபம் என அறிவித்தார். திருத்தந்தை 13ம் கிரகரி, வெற்றியின் அன்னை விழாவை, செபமாலை அன்னை விழாவாக மாற்றி, இவ்விழாவை ஆண்டுதோறும் அக்டோபர் 7ம் தேதி சிறப்பிக்குமாறும் அறிவித்தார். எனவே ஒவ்வோர் ஆண்டும், அக்டோபர் 7ம் தேதி செபமாலை அன்னை விழா சிறப்பிக்கப்படுகின்றது. 1917, ஜூலை 13ம் தேதி அன்னை மரியா பாத்திமாவில் காட்சி கொடுத்தபோது, நானே செபமாலை அன்னை, உலகில் போர் முடிவடையவும், அமைதி நிலவவும் தினமும் செபமாலை செபியுங்கள் எனக் கூறினார். திருத்தந்தை 13ம் லியோ, செபமாலை அன்னை விழாவின் பெயரில் 11 திருமடல்கள் எழுதியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.