2014-10-06 16:43:28

திருத்தந்தை : தெருவில் கைவிடப்பட்டோரின் கண்களில் இறைவனின் சாயலைக் காண வேண்டும்


அக்.06,2014. இயேசுவின் உவமையில் வரும் நல்ல சமாரியர்போல் செயல்பட அழைப்புப் பெற்றுள்ள நாம் அதே உவமையில் வரும் சத்திரக்காரர் போலவும் 24 மணிநேரமும் பிறரை வரவேற்பவர்களாக இருக்க வேண்டும் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அமெரிக்க ஐக்கிய நாட்டின் வட கரோலினாவில் சிறப்பிக்கப்படும் அமெரிக்க கத்தோலிக்கப் பிறரன்பு நிறுவனங்களின் ஆண்டுக் கூட்டத்திற்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ள திருத்தந்தை, நல்ல சமாரியராகவும், பிறரை வரவேற்று உதவுவதில் சத்திரக்காரராகவும் செயல்பட அழைப்புப் பெற்றுள்ள நாம், தெருவில் இறங்கி நின்று அங்கு தனிமையில் விடப்பட்டோரின் கண்களில் இறைவனின் சாயலைக் காண வேண்டும் என்று அதில் எழுதியுள்ளார்.
மக்கள் பயன்படுத்தப்பட்டு தூக்கியெறியப்படும் ஒரு பொருளாக நோக்கப்படும் இன்றையக் கலாச்சாரத்தில் வாழும் நாம் இறைப்பராமரிப்பிலிருந்தோ நம் பராமரிப்பிலிருந்தோ எந்த மனிதரும் ஒதுக்கி வைக்கப்படுவதில்லை என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று அச்செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை.
ஏழைகளின் சுமைகளை அகற்றி அவர்கள் தங்கள் சொந்தக் காலிலேயே நிற்பதற்கு உதவுவதாக நம் பணிகள் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ள திருத்தந்தை, அவர்களுக்காகக் குரல்கொடுப்பதையும், அவர்களுக்கு உதவும்வகையில் அமைப்புமுறைகளை மாற்றுவதையும் நோக்கி உழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.