2014-10-06 16:43:06

ஆயர்கள் மாமன்றத்தில் அனைவரும் தங்கள் கருத்துக்களை வெளிப்படையாக எடுத்துரைக்குமாறு திருத்தந்தை அழைப்பு


அக்.06,2014. குடும்பம் குறித்த உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றத்தில் கலந்துகொள்வோர் அனைவரும் பிறர் என்ன நினைப்பார்கள் என்பது குறித்து கவலைப்படாமல் தங்கள் கருத்துக்களை வெளிப்படையாக எடுத்துரைக்குமாறு அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்திங்கள் உள்ளூர் நேரம் காலை 9 மணிக்கு, வத்திக்கான் மாமன்ற அரங்கத்தில் தொடங்கிய குடும்பம் குறித்த உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றத்தில் உரையாற்றிய திருத்தந்தை, கடந்த பிப்ரவரியில் இடம்பெற்ற ஆயர்கள் மாமன்றத்திற்குப் பின்னர் தனக்கு கடிதம் எழுதிய கர்தினால் ஒருவர், திருத்தந்தை என்ன நினைப்பாரோ என நினைத்து சில கர்தினால்கள் ஆயர்கள் மாமன்றத்தில் முழு கருத்துக்களையும் முன்வைக்கவில்லை எனத் தெரிவித்திருந்தார் எனக் கூறினார்.
திருத்தந்தை வேறுவிதமாக எண்ணியிருக்கலாம் என நினைத்து தங்கள் சொந்தக் கருத்துக்களை வெளியிடாமல் செல்வது தவறாகும் என்றுரைத்த திருத்தந்தை, உண்மையை எடுத்துரைப்பதும், அதற்குத் தாழ்மையுடன் செவிமடுப்பதும் வெற்றிக்கு இட்டுச்செல்லும் என்பதால் மனம் திறந்து பேசுவோம், தாழ்ச்சியில் செவிமடுப்போம் எனக் கேட்டுக்கொண்டார்.
ஆசியாவிலிருந்து 18 பேர் உட்பட உலகின் 253 பிரதிநிதிகள் இந்த இரு வார உலக ஆயர்கள் மாமன்றத்தில் கலந்துகொள்கின்றனர். இம்மான்றம், இம்மாதம் 19ம் தேதி நிறைவடையும். ஒரு முஸ்லிம்-கத்தோலிக்கத் தம்பதியர் உட்பட 14 தம்பதியர் உட்பட இம்மாமன்றத்தில் பங்குகொள்கின்றனர்

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.