2014-10-04 16:49:49

போர்களும் மனித உரிமை மீறல்களும் நிறுத்தப்பட வேண்டும்


அக்.04,2014. ஏற்கனவே எண்ணற்ற மக்களின் உயிர்களைப் பலிவாங்கியிருக்கின்ற போர்களும் மனித உரிமை மீறல்களும் நிறுத்தப்பட வேண்டும், இதுவரை நடந்தது போதும் என்று, வத்திக்கானில் கூட்டம் நடத்திய திருஅவைத் தலைவர்கள் கேட்டுக்கொண்டனர்.
மத்திய கிழக்குப் பகுதியில் கிறிஸ்தவர்களின் நிலைமைகள் குறித்து திருப்பீடச் செயலகத்தில் இச்சனிக்கிழமையன்று நிறைவடைந்த மூன்று நாள் கூட்டத்தில் அப்பகுதியின் திருப்பீடத் தூதர்கள் கலந்துகொண்டு செய்திகளைப் பரிமாறிக்கொண்டது, அப்பகுதியின் உண்மையான நிலவரத்தை அறிய உதவியது என்றும் இக்கூட்டத்தினர் தெரிவித்தனர்.
அறிவற்ற ஆயுத வியாபாரங்கள் தொடர்ந்து இடம்பெறுகின்றன, இன்னும் பலர் வியாபாரப் பொருள்களாகப் பயன்படுத்தப்படுகின்றனர் இதனால் பிற நாடுகளுக்கு எண்ணற்ற மக்கள் அகதிகளாகச் செல்கின்றனர் என்றுரைத்த இக்கூட்டத்தினர், இம்மக்களுக்குப் பாகுபாடின்றி மனிதாபிமான உதவிகள் வழங்கப்படுமாறும் கேட்டுக்கொண்டனர்.
சில தீவிரவாதக் குழுக்களின், குறிப்பாக, ஐஎஸ் இஸ்லாமிய நாட்டின் நடவடிக்கைகள் மிகுந்த கவலை தருவதாக உள்ளன எனவும், இவர்கள் பாகுபாடின்றி வன்முறைகளையும், மனித உரிமை மீறல்களையும் நடத்துகின்றனர், மத மற்றும் இனப் பாகுபாட்டின்பேரில் இடம்பெறும் படுகொலைகளின் முன்னால் அனைத்துலக சமுதாயம் மௌனம் காக்க முடியாது எனவும் இக்கூட்டத்தில் கூறப்பட்டது.
திருப்பீடத் தலைமையகத் தலைவர்கள், மத்திய கிழக்குப் பகுதியின் திருப்பீடத் தூதர்கள் போன்றோர் இதில் பங்குபெற்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.