2014-10-04 16:49:29

திருத்தந்தை மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களிடம் : நீங்கள் நம்பிக்கையின் அடையாளம்


அக்.04,2014. விளையாட்டு, அனைவரையும் உட்படுத்தும் கலாச்சாரத்தை ஊக்குவித்து, வீணாக்கும் கலாச்சாரத்தைப் புறக்கணிப்பதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கின்றது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
பல நாடுகளின் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் மற்றும் அவர்களோடு சேர்ந்த ஏறக்குறைய ஏழாயிரம் பேரை இச்சனிக்கிழமை நண்பகலில் வத்திக்கான் 6ம் பவுல் அரங்கத்தில் சந்தித்த திருத்தந்தை, மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் நம்பிக்கையின் அடையாளமாக உள்ளனர் என்று கூறினார்.
சிலநேரங்களில் நாம் கற்பனை செய்ய முடியாத திறமைகள் ஒவ்வொரு மனிதரிலும் இருக்கின்றன என்ற உண்மைக்கு இந்த மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் சான்றாக உள்ளனர் என்றும், இத்திறமைகளை நம்பிக்கையுடனும் தோழமையுணர்வுடனும் வளர்த்துக்கொள்ள முடியும் என்றும் கூறினார் திருத்தந்தை.
இச்சந்திப்பில் கலந்துகொண்ட மற்றவர்களை ஊக்குவித்த திருத்தந்தை, எல்லைகளின்றி விளையாட்டை ஊக்குவிக்கும் இவர்களின் முயற்சிகளில் இவர்கள் தனியாக இல்லை, நம் தந்தையாம் கடவுள் இவர்களுடன் இருக்கிறார் என்றும் உறுதி கூறினார்.
இத்தாலிய மாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக் குழு, “உயிர்த்துடிப்புடன் வாழ்வதற்கு நம்பு” என்ற தலைப்பில் இவ்வார இறுதியில் நடத்திய நிகழ்வில் கலந்துகொண்ட விளையாட்டு வீரர்கள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்தனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.