2014-10-04 14:29:06

அக்டோபர் 05, புனிதரும் மனிதரே - கிறிஸ்தவ இளையோரின் பாதுகாவலர் (St Aloysius Gonzaga)


வட இத்தாலியின் மந்தோவா (Mantova) பகுதியில், செல்வம் கொழிக்கும் Gonzaga என்ற பிரபுக் குடும்பத்தில் 1568ம் ஆண்டு, மார்ச் 9ம் நாள் பிறந்தவர் ஞானபிரகாசியார் என்று அழைக்கப்படும் அலாய்சியஸ் கொன்சாகா (Aloysius Gonzaga).
அளவு கடந்த செல்வம், ஆடம்பரம் இவற்றால் குழந்தைப் பருவம் முதல் சூழப்பட்டிருந்த அலாய்சியஸ், சிறு வயது முதல் இறைவன்பால் ஈர்க்கப்பட்டார். ஒரு வீரத் தளபதியாகத் தன் மகனை வளர்க்க விரும்பிய தந்தையின் விருப்பத்திற்கு மாறாக, அவரது கோபத்தையும் எதிர்கொண்டு, அலாய்சியஸ் தனது 18வது வயதில் உரோம் நகரில் இயேசு சபையில் சேர்ந்து, குருத்துவ பயிற்சிகள் மேற்கொண்டார். இவருக்கு ஆன்மீக வழிகாட்டியாக இருந்தவர், புனித இராபர்ட் பெல்லார்மின்.
1591ம் ஆண்டு உரோம் நகரில் தொற்றுநோய் வெகுவாகப் பரவியிருந்தது. பலர் இறந்தனர். தொற்று நோயுற்றோருக்கு பணிவிடை செய்துவந்த அலாய்சியஸையும் அந்நோய் பற்றியது. அவர் விரைவில் இறந்துவிடுவார் என்று அவருக்கு நோயில் பூசுதல் என்ற அருள்சாதனம் வழங்கப்பட்டது. ஆனால், அலாய்சியஸ் நோய் நீங்கி, ஓரளவு நலம் பெற்றார்.
1591ம் ஆண்டு ஜூன் 21ம் தேதி காலையில் அலாய்சியஸ் தன் ஆன்மகுருவிடம் அன்றிரவுக்குள் தான் இறக்கப்போவதாக அறிவித்தார். அவரது உடல் நிலையைக் கண்ட எவரும் அவர் சொன்னதை நம்பவில்லை. இருந்தாலும், அவர் வற்புறுத்திக் கேட்டதால், இறக்கும் தருவாயில் இருப்போருக்கு அளிக்கும் அருள் அடையாளத்தை அவரது ஆன்மகுரு அவருக்கு அளித்தார். அலாய்சியஸ் அன்று நள்ளிரவுக்கு சிறுது நேரத்திற்கு முன் தனது 24வது வயதில் இறையடி சேர்ந்தார்.
இறந்து 14 ஆண்டுகளில் இவர் முத்திபேறு பெற்றவராக உயர்த்தப்பட்டார். இவரும், தனிஸ்லாஸ் கோஸ்கா என்ற மற்றொரு இளம் இயேசுசபைத் துறவியும் 1726ம் ஆண்டு புனிதர்களாக உயர்த்தப்பட்டனர். கிறிஸ்தவ இளையோரின் பாதுகாவலராக அலாய்சியஸ் 1926ம் ஆண்டு அறிவிக்கப்பட்டார்.
இப்புனிதரின் அடையாளங்களாய் விளங்குவன: லில்லி மலர், மண்டை ஓடு, மற்றும் திருச் செபமாலை. இவரது நெறிமாறா கற்பைக் குறிப்பது லில்லி மலர்; இளவயதிலேயே இவர் இறந்ததைக் குறிப்பது மண்டை ஓடு; அன்னை மரியாவின் மீது இவர் கொண்டிருந்த பக்தியைக் குறிப்பது திருச் செபமாலை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.