2014-10-04 16:49:43

அக்.05-19 உலக ஆயர்கள் மாமன்றம், குடும்பத்தின் அழகை உலகுக்கு உணர்த்தும்


அக்.04,2014. குடும்பம் பற்றிய உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றம், குடும்பத்தின் அழகை உலகுக்கு உணர்த்தும் மற்றும் குடும்பம் முன்வைக்கும் உலகளாவியச் சவால்களுக்கு நற்செய்தியின் ஒளியில் பதில் காண்பதற்கு முயற்சிக்கும் என்று, இம்மாமன்றத்தின் பொதுச் செயலர் கூறினார்.
இம்மாமன்றம், திருமண முறிவு பற்றியது அல்ல, மாறாக, குடும்பம் பற்றியது, மேற்குலகின் பிரச்சனைகளோடு இதனை இணைத்துப் பேசாதிருப்போம் என்று, இம்மாமன்றம் குறித்து பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளித்தபோது கூறினார் கர்தினால் லொரென்சோ பால்திச்சேரி.
கடந்த காலத்தில் நடந்த மாமன்றங்களோடு இதனை ஒப்பிடும்போது, சில புதிய கூறுகள் இதில் இடம்பெறும் என்றும், அனைத்து நிலைகளையும் மதிக்கும் சூழலில், கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு முழு சுதந்திரம் வழங்கப்படும் என்றும் கர்தினால் பால்திச்சேரி தெரிவித்தார்.
ஐந்து கண்டங்களிலிருந்து 191 மாமன்றத் தந்தையர் உட்பட 253 பேர் கலந்து கொள்ளும் இம்மான்றத்தின் நிறைவில் திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள் அருளாளர் நிலைக்கு உயர்த்தப்படுவார் எனவும், அதை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களே நிறைவேற்றுவார் எனவும் கூறினார் கர்தினால் பால்திச்சேரி.
புனித குழந்தை தெரேசா, அவரின் பெற்றோர், இன்னும், அருளாளர்கள் லூயிஜி, மரிய பெல்த்ராமே குவாத்ரோக்கி ஆகியோரின் திருப்பண்டங்கள், இம்மாமன்றம் நடக்கும் நாள்களில் உரோமையில் பொதுமக்களின் வணக்கத்துக்கு வைக்கப்படும் என்றும் இம்மாமன்றப் பொதுச் செயலர் கர்தினால் பால்திச்சேரி அறிவித்தார்.
ஆப்ரிக்காவிலிருந்து 42 பேர், அமெரிக்காவிலிருந்து 38 பேர், ஆசியாவிலிருந்து 29 பேர், ஐரோப்பாவிலிருந்து 78 பேர் மற்றும் ஓசியானியாவிலிருந்து 4 பேர் இதில் பங்குபெறுவர்.
“குடும்பங்களுக்கு நற்செய்தி அறிவிக்கும் சூழலில் மேய்ப்புப்பணி சவால்கள்” என்ற தலைப்பில் இம்மாதம் 5 முதல் 19 வரை மூன்றாவது உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றம் வத்திக்கானில் நடைபெறவுள்ளது. 16 வல்லுனர்கள், திருமணமான தம்பதியர் உட்பட 38 பார்வையாளர்கள், 8 பிற கிறிஸ்தவ சபைப் பிரதிநிதிகளும் இதில் பங்குபெறுவர். கணவர் முஸ்லிமாகவும் மனைவி கத்தோலிக்கராகவும் உள்ள ஒரு தம்பதியரும் இதில் அடங்குவர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.