2014-10-03 16:15:20

புலம்பெயர்ந்தோர் ஐரோப்பாவுக்குள் பாதுகாப்பாக நுழைவதற்கு ஆவன செய்தல் வேண்டும்


அக்.03,2014. புலம்பெயர்ந்தோர் ஐரோப்பாவுக்குள் பாதுகாப்பாக நுழைவதற்கு மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்படுமாறு இயேசு சபையின் அனைத்துலக புலம்பெயர்ந்தோர் அமைப்பான ஜே.ஆர்.எஸ். கேட்டுக்கொண்டுள்ளது.
இத்தாலியின் லாம்பெதூசா சிறிய தீவுப் பகுதியில் பெரிய படகு விபத்து இடம்பெற்றதன் முதலாம் ஆண்டு, அக்டோபர் 03, இவ்வெள்ளியன்று நினைவுகூரப்பட்டவேளையில் இவ்வாறு கூறினார் ஜே.ஆர்.எஸ் இயக்குனர் அருள்பணி பீட்டர் பல்லேய்ஸ். இவ்விபத்தில் 366 பேர் இறந்தனர்.
இத்தாலியக் கடற்பகுதியில் ஆபத்தான பயணம் செய்யும் குடியேற்றதார மக்களில் ஏறக்குறைய ஒரு இலட்சத்து 42 ஆயிரம் பேரை, Mare Nostrum என்ற இத்தாலிய அமைப்பு காப்பாற்றியுள்ளது என்றும் அருள்பணி பல்லேய்ஸ் கூறினார்.
சண்டைகள், வறுமை மற்றும் சர்வாதிகார ஆட்சிக்குப் பயந்து தங்கள் நாடுகளைவிட்டு வெளியேறும் இம்மக்களைப் பாதுகாப்பதற்கு ஐரோப்பிய அளவில் நடவடிக்கைகள் அவசியம் எனவும் கூறினார் அருள்பணி பல்லேய்ஸ்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், இவ்விபத்தில் உயிர்தப்பியவர்களில் சிலரை கடந்த புதனன்று சந்தித்துபோது, ஐரோப்பியர்கள், தங்களின் இதயக் கதவுகளை இந்தக் குடியேற்றதாரருக்குத் திறக்குமாறு கேட்டுக்கொண்டார்.
சிரியா மற்றும் ஆப்ரிக்காவின் பல அகதிகளும், கட்டாயமாக நாடுகளைவிட்டு வெளியேறுகிறவர்களும் ஐரோப்பாவில் நுழைவதற்கு, Lampedusa சிறிய தீவு, மிக அருகிலுள்ள நுழை வாயிலாக உள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.