2014-10-03 16:07:28

திருத்தந்தை : கடவுளின் மீட்புப் பாதைக்கு நாம் நம்மைத் திறந்து வைத்துள்ளோமா?


அக்.03,2014. கடவுளின் மீட்புக் கொடைக்கு நாம் நம்மைத் திறந்து வைத்துள்ளோமா? அல்லது மனிதர்கள் அமைத்துள்ள சட்டங்கள் மற்றும் விதிமுறைகளின் பாதுகாப்பில் அடைக்கலம் தேடுவதை விரும்புகின்றோமா? என்ற கேள்வியை இவ்வெள்ளிக்கிழமை திருப்பலியில் எழுப்பினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கடவுளின் ஒரே விருப்பம், தம் மக்களைக் காப்பாற்றுவதே, ஆயினும், நம் சொந்த மீட்புக்குச் சட்டங்களை அமைப்பதற்கு நாம் அடிக்கடி விரும்புகின்றோம் என்றும், இயேசுவின் வாழ்வில் சென்று சேர்க்கும் பல விவிலியக் கதைகளின் புரிய முடியாத நிலையும் இதுவே என்றும் கூறினார் திருத்தந்தை.
தம் சொந்த மக்களால் புறக்கணிக்கப்பட்டு மறக்கப்படுவது குறித்து இயேசு வருத்தம் அடையும் இந்நாளைய நற்செய்தி வாசகத்தை(லூக்.10,13-16) தனது மறையுரையில் விளக்கிய திருத்தந்தை, ஆட்சி செய்யும் வர்க்கமே, மீட்பின் கடவுளின் பாதைக்குரிய கதவுகளை மூடுகிறது, அதனால்தான் இயேசு தமது காலத்துத் தலைவர்களோடு காரசாரமான வார்த்தைகளைப் பகிர்ந்துகொண்டார் என்று கூறினார்.
இயேசு காலத்துத் தலைவர்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள விரும்பினார்கள், ஆண்டவரின் பாதையையும் மீறினார்கள், இந்தப் போக்கானது இயேசு வழியாகவே மீட்பு வருகிறது என்ற இறைமக்கள் சிந்தனையிலிருந்து மாறுபட்டது எனவும் கூறினார் திருத்தந்தை.
இத்தலைவர்கள், மீட்பை 613 கட்டளைகளை நிறைவேற்றுவதற்குள் அடக்கினர், இவர்கள் கருணையிலும் மன்னிப்பிலும் நம்பிக்கை கொள்ளாமல், வெறும் பலிகளில் மட்டுமே நம்பினர் எனவும் உரைத்த திருத்தந்தை, நாம் எவ்வாறு மீட்புப்பெற விரும்புகின்றோம் என்றும் விசுவாசிகளிடம் கேட்டார்.
இயேசுவைப் பின்செல்லாமல், பிற குருஜிக்களிலும், மனிதர் அமைத்த கட்டளைகளிலும் ஒருவர் புகலிடத்தைத் தேடினால், அவர் பாதுகாப்பை உணரலாம், ஆனால் உண்மை என்னவெனில், கடவுள் கொடுக்கும் இலவசக் கொடையைப் பெறாமல், அவர் தனது மீட்பை விலைக்கு வாங்குகிறார் என்றும் திருப்பலி மறையுரையில் எச்சரித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.