2014-10-03 16:02:45

குருத்துவ அழைத்தல்கள் கரடுமுரடான இடத்திலுள்ள வைரம் போன்றவை


அக்.03,2014. திருப்பீட குருக்கள் பேராயம் நடத்திய ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தில் கலந்துகொண்ட எண்பது பிரதிநிதிகளை இவ்வெள்ளியன்று வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, கரடுமுரடான இடத்திலுள்ள வைரம் போன்ற குருத்துவ அழைத்தல்களுக்குப் பட்டை தீட்டவேண்டியது அவசியம் எனவும், இந்த அழைத்தல்களில், உருவாக்குதல், நற்செய்தி அறிவிப்பு, செபம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
திருப்பணிக் குருத்துவத்துக்கான அழைப்பு ஒரு நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டுள்ள புதையலாகும், திருப்பொழிவு செய்யப்பட்ட குருக்கள் இந்தப் புதையலைக் கண்டுணர்ந்து வெளிச்சத்துக்குக் கொண்டு வரவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருப்பணிக்கு அழைக்கப்பட்டுள்ளவர்கள் தங்களின் இறையழைப்புக்குத் தாங்கள் முதலாளிகள் அல்ல, மாறாக, தங்களின் கிறிஸ்தவ விசுவாசத்தை அறிவிக்காமல் அல்லது மத நடவடிக்கைகளிலிருந்து விலகி இருக்கும் மக்கள் என, அனைத்து மக்களின் நன்மைக்காகவும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள கடவுளின் கொடையின் நிர்வாகிகள் என்றும் தெரிவித்தார் திருத்தந்தை.
இறையழைத்தல்களின் இந்தப் புதையல்களிடம் முழு கிறிஸ்தவ சமூகமும் அக்கறை காட்டி, பாசத்தோடு அவர்களோடு இருந்து அவர்களை ஊக்குவிக்குமாறும் திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.
குருத்துவ அழைத்தல்களில் மகிழ்வும், மனநிறைவும் காண்பது, சோர்வு மர்றும் வேதனை நேரங்களில் தாங்கிப்பிடிக்கும், செபத்தின் வழியாகவும் அவற்றைப் பெறுகிறோம் என்றும் கூறினார் திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.