2014-10-03 16:02:01

ஐரோப்பாவின் காயங்களும் வேதனையும் இயேசுவின் வல்லமையில் குணமடையும்


அக்.03,2014. பங்குத்தளங்கள், குடும்பங்களின் குடும்பமாக மாறும்பொருட்டு, மேய்ப்பர்களும் குடும்பங்களும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டியது இன்றியமையாதது என்று ஐரோப்பிய ஆயர்களிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உரோமையில் கூட்டம் நடத்திவரும், CCEE என்ற ஐரோப்பிய ஆயர்கள் பேரவைகளின் கூட்டமைப்பினரை இவ்வெள்ளியன்று வத்திக்கானில் சந்தித்த திருத்தந்தை, மேய்ப்புப்பணிப் புதுப்பித்தலுக்கு, விலைமதிப்பில்லாத வளமாக, குடும்பம் எப்படி உள்ளது என்பது குறித்து சிந்திப்பதற்கு இந்தக் கூட்டம் நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது என்றும் கூறினார்.
குடும்பம் குறித்த உலக ஆயர்கள் மாமன்றம் தொடங்கவிருக்கும் இவ்வேளையில், குடும்பமும், ஐரோப்பாவின் எதிர்காலமும் என்ற தலைப்பில் இக்கூட்டம் நடைபெறுவது எவ்வளவு பொருத்தமாக உள்ளது என்பதைக் குறிப்பிட்டு, இதில் பங்கெடுக்கும் எழுபது பிரதிநிதிகளுக்குத் தனது வாழ்த்தையும் தெரிவித்தார் திருத்தந்தை.
குழந்தைகள் கருவிலே அழிக்கப்படுவது, வயதானவர்கள் ஒதுக்கப்படுவது, வேலை கிடைப்பதற்காகக் கஷ்டப்படும் இளையோர் என ஐரோப்பா காயமடைந்துள்ளது என்றும், இவையே ஐரோப்பாவின் முடிவு அல்ல, ஏனெனில், ஐரோப்பாவில் நிறைய வளங்கள் உள்ளன, அவற்றின் காயங்களும் வேதனையும் இயேசுவின் வல்லமையில் குணமடையும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்
இக்கூட்டம் இச்சனிக்கிழமையன்று நிறைவடையும்.

மேலும், “திருஅவைக்கும், சமுதாயத்திற்கும் மகிழ்ச்சியான குடும்பங்கள் இன்றியமையாதவை. உலக ஆயர்கள் மாமன்றத்திற்காகச் செபியுங்கள்”என்ற வார்த்தைகளை, இவ்வெள்ளியன்று தனது டுவிட்டரில் எழுதியுள்ளார் திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.